போலி கையெழுத்து போட்டு மற்றவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1 கோடி மோசடி - ஒருவர் கைது


போலி கையெழுத்து போட்டு மற்றவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1 கோடி மோசடி - ஒருவர் கைது
x

மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, அவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை வேளச்சேரியைச்சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 37). இவர், பி.எஸ்.சி பட்டதாரி. இவருக்கு வேலை இல்லை. இதனால் நூதன மோசடியில் ஈடுபட்டார். பாலாஜி எண்டர் பிரைசஸ், எஸ்.எல்.என்.எண்டர்பிரைசஸ் என்ற பெயர்களில் 2 நிறுவனங்களை தொடங்கினார். அவற்றை பிரபல வணிக கம்பெனிகள் என்று விளம்பரப்படுத்தினார்.

இந்த கம்பெனிகளில் முதலீடு செய்தால், அதிக வட்டி அல்லது லாப பங்கு தொகை தரப்படும், என்றும் அறிவிப்பு வெளியிட்டார். முதலீடு செய்ய பணம் இல்லாதவர்களுக்கு கூட வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகவும், அந்த பணத்தை எனது கம்பெனியில் முதலீடு செய்யுங்கள் என்றும் ஆசை காட்டினார்.

இதற்கு விருப்பம் உள்ளவர்களின் பான்கார்டு, ஆதார் கார்டு, வேலை செய்பவர்களாக இருந்தால் அவர்களது சம்பள பட்டியல் மற்றும் சம்பள ரசீது போன்ற ஆவணங்களை வாங்கி, அவர்கள் கையெழுத்தை போலியாக போட்டு, அவர்கள் பெயரில் அவர்களுக்கு தெரியாமலேயே வங்கிகளில் கடன் பெற்று நூதன மோசடியில் ஈடுபட்டு வந்தார் லட்சுமி நாராயணன். இவரது மோசடி வலையில் சிக்கி வங்கிக்கடன் பிரச்சினையில் மாட்டிய அஸ்வின்குமார் தம்பதி சென்னை மத்திய குற்றப்பிரிவு (ஆவண மோசடி குழு-1) போலீசில் புகார் கொடுத்தனர்.

கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் மீனா ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் லட்சுமிநாராயணன் இதுபோல நிறைய பேர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் மாணவ-மாணவிகளிடம் கல்வி கடன் வாங்கி தருவதாக கூறியும், கமிஷன் தொகை வாங்கி மோசடி லீலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

மொத்தம் ரூ.1.8 கோடி சுருட்டியதாக லட்சுமி நாராயணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story