புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் 900 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்- கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 900 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 900 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
தற்செயல் விடுப்பு
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு கூறியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம், கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், வணிகவரி பணியாளர்கள் சங்கம், கணக்கு கருவூல பணியாளர்கள் சங்கம், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஈரோடு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் சுமார் 900 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
இவ்வாறு அவர் கூறினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க ஈரோடு வட்ட தலைவர் கண்ணன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சம்பந்த மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.