தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் மூலம்620 சிம்கார்டு வழங்கிய கடைக்காரர் கைது
தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் 620 சிம்கார்டு வழங்கிய கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் 620 சிம்கார்டு வழங்கிய கடைக்காரர் கைதுசெய்யப்பட்டார்.
பெண் புகார்
மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் அளித்த அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகள் போலியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்த வினோதினி என்பவர் தனது ஆவணம் தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடைக்காரர் கைது
விசாரணையில், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ராயன் (வயது 38) என்பவர் தனியார் சிம்கார் விற்பனை மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். அவரது கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வந்த நபர்களின் ஆதார் விவரங்களை பயன்படுத்தி பல போலியான சிம்கார்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மொத்தம் 620 சிம்கார்டுகளை போலி ஆவணம் மூலம் ஆக்டிவ் செய்து உள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ராயனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன், 3 சிம்கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதே போன்று பலர் போலி ஆவணம் மூலம் சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்ததும், பல சட்டவிரோத செயல்களுக்கு அந்த சிம்கார்டுகளை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணையதளம்
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறும் போது, மத்திய அரசின் https://tafcop.sancharsaathi.gov.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்து, தங்கள் செல்போன் எண்களுடன் எத்தனை போலியான செல்போன் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கு தெரியாமல் கூடுதல் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால் அந்த இணையதளம் மூலமே உடனடியாக அந்த செல்போன் எண்களை செயலிழக்கச் செய்ய முடியும். மேலும் பொதுமக்கள் ஜெராக்ஸ் எடுக்க கடைகளுக்கு செல்லும்போது, கடைக்காரர்களுக்கு வாட்ஸ்அப் மூலமோ, இ-மெயில் மூலமோ ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பும்போது, பிரின்ட் எடுத்த பின்னர் அவர்களிடம் உள்ள தங்களின் ஆவணங்களை அழித்துவிட்டனரா என உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.