சிற்றார்-1 அணை பகுதியில் 10 செ.மீ. மழை


சிற்றார்-1 அணை பகுதியில் 10 செ.மீ. மழை
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றார்-1 அணை பகுதியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மதியம் மலை பகுதி மற்றும் அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 28.6, பெருஞ்சாணி அணை- 40.8, புத்தன் அணை- 35, சிற்றார்-1 அணை- 103.8, சிற்றார்-2 அணை- 51.2, மாம்பழத்துறையாறு அணை- 15, முக்கடல் அணை- 6.2, குழித்துறை- 9.2, சுருளோடு- 26.2, தக்கலை- 58, பாலமோர்- 31.2, திற்பரப்பு- 89.8, கோழிப்போர்விளை- 22.4, அடையாமடை- 39.1, முள்ளங்கினாவிளை- 2.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

இதில் அதிகபட்சமாக சிற்றார்-1 அணைப்பகுதியில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 975 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 538 கன அடி தண்ணீரும், அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 110 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 161 கன அடியும், பொய்கை அணைக்கு வினாடிக்கு 9 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 7 கன அடியும், முக்கடல் அணைக்கு 8.3 கன அடியும் வந்தது.

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த மழையினால் கடந்த 12 நாட்களில் 77 வீடுகள் இடிந்து விழுந்தன. நேற்று முன்தினம் பெய்த மழையில் கல்குளம் தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியளவும் இடிந்து விழுந்தன. கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்தன. இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே மழையினால் இடிந்து விழுந்த வீடுகளின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.


Next Story