உடைந்த குழாய்களால் உருவானது குடிநீர் தட்டுப்பாடு


உடைந்த குழாய்களால் உருவானது குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 3 July 2023 2:15 AM IST (Updated: 3 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

உடைந்த குழாய்களால் உருவானது குடிநீர் தட்டுப்பாடு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி என்றாலே பசுமை போர்த்திய நிலப்பரப்புதான் நினைவுக்கு வரும். அதிலும், ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களுக்கு தனி இடம் உண்டு. எப்போதும் பச்சை பசேல் என செழிப்புற காட்சியளிக்கும் பொள்ளாச்சியில், குடிநீர் தட்டுப்பாடு தற்போது தலைவிரித்து ஆடுகிறது.

நீர் இருப்பு

குறிப்பாக நகர்ப்புறங்களில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 கிராம ஊராட்சிகளும், தெற்கு ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 12 கிராம ஊராட்சிகளும், ஆனைமலை ஒன்றியத்தில் 19 கிராம ஊராட்சிகளும் உள்ளன.

கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்த பருவமழை பெய்யாததால் குடிநீர் ஆதாரமான ஆழியாறு அணையில் நீர்இருப்பு குறைவாக உள்ளது. இருப்பினும், குடிநீருக்கு தேவையான நீர் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடும் அவதி

ஆனாலும், மூலனூர், மாரப்பகவுண்டனூர், பனப்பட்டி உள்ளிட்ட கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சில இடங்களில் குழாய் உடைந்து, வெளியேறும் குடிநீரை குடத்தில் பிடித்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

மூலனூரை சேர்ந்த மரகம்:

அம்பராம்பாளையத்தில் இருந்து அனுப்பர்பாளையம் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வந்து எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்கின்றனர். 20 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடும் அவதிப்படுகிறோம். ஆழ்துளை கிணறு மூலம் ஊராட்சிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரைதான் குடிக்க பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

விலைக்கு வாங்கி...

பனப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன்:

எங்கள் கிராமத்திற்கு மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ரூ.40 கொடுத்து குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால் குழாய் உடைப்பு காரணமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறுகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மின் மோட்டார் பழுது

மாரப்பகவுண்டனூரை சேர்ந்த கோபிநாத்:

பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் எங்கள் கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்குள்ள வட்டக்கிணற்றில் மின் மோட்டார் அடிக்கடி பழுதாவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதனால் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை.

மேலும் ஆழ்துளை கிணறு, குளம், குட்டை உள்ளிட்டவை முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இது தவிர அருகில் உள்ள சரளப்பதி கிராமத்திற்கு குடிநீர் வினியோகிக்க எவ்வித திட்டமும் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய பழங்குடியின மக்கள் ஆழ்துளை கிணற்றிலும், விலைக்கு வாங்கியும் குடிநீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Next Story