கோலியனூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
Development project work
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடர்ந்தனூர் ஊராட்சி ராகவேந்திரா நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.1,11,507 மதிப்பில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அகரம் ஊராட்சியில் ரேஷன் கடை, கிளை நூலகத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர். தொடர்ந்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை கலெக்டர் பார்வையிட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்ததுடன், வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களை படிக்கச்சொல்லி மாணவர்களின் வாசிப்பு, கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் அதே பகுதியில் ரூ.84 லட்சம் மதிப்பில் சமுதாயம் கூடம் கட்டுமானப்பணியை பார்வையிட்ட அவர், கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்டு, கம்பி உள்ளிட்டவற்றை தரமானதாக தேர்ந்தெடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படியும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கோலியனூர் ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து, போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலர் ஷபானாஅஞ்சும், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தலட்சுமி, ஜானகி, உதவி பொறியாளர்கள் அசோக்குமார், அறிவொளி உள்பட பலர் உடனிருந்தனர்.