அரசு பள்ளி மாணவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு


அரசு பள்ளி மாணவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
x

The Superintendent of Police celebrated his birthday with government school students

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், தனது பிறந்த நாளை அரசு பள்ளி மாணவர்களுடன் கொண்டாடினார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், நானும் உங்களைப்போன்று அரசு பள்ளியில் தரையில் அமர்ந்து படித்து உயர் பதவிக்கு வந்ததாக கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் ஜவஹர் தனது பிறந்த நாளான நேற்று நாகை வெளிப்பாளையம் நெல்லுக்கடை தெருவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்றார்.

அங்குள்ள மாணவ, மாணவிகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

படிக்கும் ஆர்வம்

நானும் உங்களைப்போன்று இந்த வயதில் இதேபோல் அரசு பள்ளியில் தரையில் அமர்ந்து தான் படித்தேன். நான் படிக்கும் காலத்தில் எனது பெற்றோர் எனக்கு தினந்தோறும் கதை புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்க சொல்வார்கள். ஆரம்பத்தில் கதை புத்தகத்தை படித்த எனக்கு பின்னர் பாடபுத்தகத்தை படிக்கும் ஆர்வம் வந்தது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் உயர்ந்த பதவியை அடைய முடியும். அதற்கு விடாமுயற்சி முக்கியமானது ஆகும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை வீட்டிற்கு சென்று படிக்க வேண்டும். தினந்தோறும் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும். இதனால் படிக்கும் ஆற்றல் வளர்ந்து விடும்.

பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்

பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வரும் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். தினந்தோறும் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்வுகளை தங்களது குழந்தைகளிடம் கேட்டு கலந்துரையாட வேண்டும். இதுவே நமது குழந்தையின் எதிர்காலத்திற்கு வெற்றியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் பாராட்டு

இதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள், எழுது பொருட்கள், இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ரோகிணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் அதிகாரி அரசு பள்ளியில் தனது பிறந்த நாளை கொண்டாடியதை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story