தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு


தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. பிச்சி கிேலா ரூ.1000-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளை மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. பிச்சி கிேலா ரூ.1000-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போ மூலம் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

அவ்வாறு வரும் பூக்களை வாங்கி செல்ல குமரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து குவிவார்கள்.

ஓணம் பண்டிகை

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய விழாவில் ஒன்றான ஓணம் பண்டிகை கடந்த 20-ந்தேதி தொடங்கியது. திருவோணம் வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரள மக்கள் வீடுகளிலும், பள்ளி-கல்லூரிகளிலும் வண்ண வண்ண பூக்களால் தினமும் அத்தப்பூ கோலமிடுவார்கள். இதற்காக கேரள வியாபாரிகள் தோவாளை மார்க்கெட்டுக்கு வருகை தந்து பூக்களை கொள்முதல் செய்வது வழக்கம்.

அதன்படி ஓணம் விழா தொடங்கியதில் இருந்து கடந்த 3 நாட்களாக கேரள வியாபாரிகள் வராததால் பூக்கள் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

பிச்சி ரூ.1000

இந்தநிலையில் நேற்று அதிகாலையிலேயே கேரளாவில் உள்ள கல்வி நிறுவனம் மற்றும் அரசு அலுவலக அலுவலர்கள், வியாபாரிகள் மார்க்கெட்டில் குவிந்தனர். அவர்கள் பூக்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.350-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.650 உயர்ந்து ரூ.1000-க்கு விற்பனையானது.

இதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ.350-ல் இருந்து ரூ.550 உயர்ந்து ரூ.900-க்கும், மல்லி ரூ.450-ல் இருந்து ரூ.450 உயர்ந்து ரூ.900-க்கும், தாமரை ஒரு பூ ரூ.7-ல் இருந்து ரூ.13 உயர்ந்து ரூ.20-க்கும் விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.200, கனகாம்பரம் ரூ.750, வாடாமல்லி ரூ.150, துளசி ரூ.50, சம்பங்கி ரூ.200 தாமரை ரூ.20, கோழி பூ ரூ.80, பச்சை ரூ.8, மஞ்சள் கிரேந்தி ரூ.55, சிவப்பு கிரேந்தி ரூ.65, சிவந்தி மஞ்சள் ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.320, கொழுந்து ரூ.100, மரு கொழுந்து ரூ.120, ரோஸ்(பாக்கெட்) ரூ.20, ஸ்டம்புரோஸ் ரூ.300, பட்டன்ரோஸ் ரூ.300 என விற்பனையானது.

மேலும் விலை உயரும்

இதுகுறித்து பூ வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், "ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் வாங்குவதற்காக கேரள வியாபாரிகள் வரத்தொடங்கியதாலும், நாளை(அதாவதுஇன்று) முகூர்த்தநாள் என்பதாலும் விலை உயர்ந்து காணப்பட்டது. இனிவரும் நாட்களில் கேரளாவுக்கு பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, வரும் நாட்களிலும் பூக்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.


Next Story