கட்டிலாக விளங்கிய திண்ணைகள்


கட்டிலாக விளங்கிய திண்ணைகள்
x

வெயில் கால இரவுகளில் காற்றாட படுத்து உறங்கும் கட்டிலாகவும் திண்ணைகள் பயன்பட்டன. வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் சத்திரமாகவும் திண்ணைகள் விளங்கின.

சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதி காலம் வரையில் ஒவ்வொரு வீட்டிலும் நாம் காணக்கூடிய முக்கியமான கட்டுமானம் திண்ணை. சிறிய ஓட்டு வீடென்றால் அதற்கேற்ற அளவில் சிறியதாகவும், அரண்மனை போன்ற பெரிய வீடுகளாக இருந்தால் ஏறக்குறைய ஒரு பேட்மிண்டன் ஆடுகளம் அளவுக்கும் திண்ணைகள் கட்டப்பட்டிருக்கும். அவ்வளவு ஏன், குடிசை வீடுகளில் கூட மண்ணால் எழுப்பப்பட்டு சாணத்தால் மெழுகப்பட்ட திண்ணைகளை பார்க்கமுடியும். தரையிலிருந்து சற்று உயரம் வரை சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ சுவர்கள் எழுப்பப்பட்டு, நடுவில் இறுக்கமாக மண்ணைக்கொட்டி சமதளமாக்கி, அதன் மேற்பரப்பினை சிமெண்டு கலவையை பரப்பி மூடிவிட்டால் திண்ணை தயார்.

சில வீடுகளில் திண்ணைகளின் மேற்பகுதியை கடப்பா கற்களாலும் மூடுவது உண்டு. அவரவர் வசதிக்கேற்ப உள்ளூர் மரங்கள் அல்லது, பர்மா தேக்கு மரங்கள் தூண்களாக மாறி அந்த திண்ணைகளிலிருந்து கிளம்பி வீட்டின் மேற்கூரையை தாங்கி நிற்கும். இத்தகைய வீடுகளின் வாசலைத் தாண்டி நுழைந்ததும் நம்மை முதலில் எதிர்கொள்வது இந்தத் திண்ணைகள்தான். திண்ணைகள் தரும் சவுகரியங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லப்போனால், அந்தக் காலத்திய வாசல் திண்ணைகள், இப்போதைய வரவேற்பறையின் மறுவடிவம் எனலாம். வீட்டு விசேஷங்களுக்கு வருகை தரும் உறவினர்களையும், அன்றாடம் சந்திக்க வீடு தேடி வருகிறவர்களையும் சந்திக்கக்கூடிய வரவேற்பறையாக அந்தக்காலத்தில் பயன்பட்டவை திண்ணைகள்தான்.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கல்விச்சாலைகள் ஊர்தோறும் திறக்கப்படாத காலகட்டங்களில் திண்ணைப்பள்ளிகள் மூலம் சிறுவர், சிறுமிகள் ஆரம்பக்கல்வி பெற்று பிறகு அண்டை நகரங்களில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுப்பபட்டார்கள். தாயக்கட்டை, 7 கல் விளையாட்டு, பரமபதம், பல்லாங்குழி ஆகியவையுடன், கேரம் போர்டு, சதுரங்கம் போன்றவற்றையும் சிறுவர்களும் சிறுமிகளும் வீட்டுத்திண்ணைகளிலோ அல்லது தங்கள் நண்பர்களின் வீட்டுத்திண்ணைகளிலோ ஆடிக்களித்தார்கள்.

வெயில் கால இரவுகளில் காற்றாட படுத்து உறங்கும் கட்டிலாகவும் திண்ணைகள் பயன்பட்டன. திண்ணைகளால் இன்னொரு பயனும் உண்டு. கோவில் திருவிழாக்களை காணவும், உறவுகளை பார்க்கவும் கால்நடையாக ஊர்விட்டு ஊர் செல்லும் வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் சத்திரமாகவும் திண்ணைகள் விளங்கின. எனவே இப்போதும், வீடுகளில் வசதிப்பட்ட ஓர் இடத்தில் திண்ணையை அமைக்கலாம் அல்லவா..?


Next Story