காலையில் தேநீருடன் பிஸ்கட் சாப்பிடலாமா?
காலை வேளையில் சிலர் தேநீரில் பிஸ்கட்டை நனைத்து ருசித்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அப்படி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கான காரணத்தை உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா விவரிக்கிறார்.
''தேநீர்-பிஸ்கட்டுடன் அன்றைய நாளை தொடங்குவது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கும். தொப்பையை சுற்றி கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். உடல் ஊட்டச்சத்தை உறிஞ்சுவதை தடுக்கும். ஒருசிலருக்கு வயிற்று பிரச்சினைகள் இருக்கலாம். பிஸ்கட் மற்றும் தேநீரில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்திவிடும். பிஸ்கட்டில் கலந்திருக்கும் கோதுமை மாவு அல்லது மைதா மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளால் செரிமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்'' என்கிறார்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேநீர்-பிஸ்கட் சாப்பிடுவதற்கு மாற்றாக சில பானங்களை பருகலாம். வயிறு உப்புசம் தொடர்பான பிரச்சினை கொண்டிருப்பவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து வடிகட்டி பருகலாம். இது செரிமான நொதிகளின் செயல்பாட்டை தூண்டி செரிமானத்தை மேம்படுத்தும். வீக்கம் மற்றும் வாய்வு தொந்தரவை தடுக்கும்.
மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீரில் 15 மில்லி கற்றாழை சாறு கலந்து பருகலாம். இது குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இயற்கையான மலமிளக்கியாக செயல்படும்.
இளநீரில் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை சேர்த்தும் பருகலாம். இது பசி உணர்வை கட்டுப்படுத்திவிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். பெருஞ்சீரக தண்ணீரும் செரிமானத்தை மேம்படுத்தும். செரிமான பிரச்சினைகளை போக்க உதவும். குடல் வீக்கத்தையும் குறைக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் தூள் சேர்த்து பருக வேண்டும்.