நீர் நிலையை பாதுகாக்கும் திருவிழா
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்சாத் கிராமத்திலும் மீன் பிடி திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளில் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவதுண்டு. மீன் பிடி வலை, கூடை உள்ளிட்டவற்றுடன் நீர் நிலைக்குள் கிராம மக்கள் உற்சாகமாக இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்வார்கள்.
ஆனால் அங்குள்ள நீர் நிலைக்குள் கிராம மக்கள் கூட்டமாக இறங்கி மீன் பிடிப்பதில்லை. நீருக்குள் சேர்ந்திருக்கும் குப்பைகளை கூடையில் சேகரித்து கரையில் கொட்டுகிறார்கள். நீரின் அடிப்பகுதி வரை மூழ்கி ஒரு குப்பை கூட தேங்கி இருக்காமல் தூர் வாருகிறார்கள். இந்த தூய்மை பணியில் 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற் கிறார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை கிராம மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. அத்துடன் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்தும், சுற்றுப்புற தூய்மை குறித்தும் வலியுறுத்தப்படுகிறது. இந்த திருவிழா நூற்றாண்டுகளை கடந்து இன்றளவும் பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அணி அணியாக பிரிந்து நீர் நிலைகளை சுத்தம் செய்யும் திருவிழாவை நடத்துகிறார்கள். நீர் வெளியேறும் இடத்தில் குவிந்திருக்கும் மண், செடி, கொடிகளை அகற்றி ஆண்டு முழுவதும் தடையின்றி தண்ணீர் செல்வதை உறுதி செய்கிறார்கள்.
இந்த கிராமத்தில் அமைந்திருக்கும் நீர் நிலையில் இருந்துதான் அருகில் உள்ள சுமார் 25 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது. மேலும் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாசனமும் மேற்கொள்ளப் படுகிறது. இந்த நீர் நிலைக்கு பாஞ்ச் ஹத் என்று பெயர். அதற்கு 500 என்று அர்த்தம். முன் காலத்தில் இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட இயற்கை நீரூற்றுகள் இருந்ததாக நம்பப்படுகிறது.
நீர் நிலைகளை பேணி பாதுகாப்பதோடு சமூக ஒற்றுமையை போதிக்கும் நோக்கோடு பல கிராம மக்கள் ஆண்டு தோறும் ஒன்று கூடி நீர் நிலையை சுத்தப்படுத்தும் நிகழ்வு ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. சுற்றுச் சூழல் மாசுபாடு அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கிராம மக்கள் பொறுப்புணர்வோடு செயல்படுவதை பார்த்து பல தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.
''எனக்கு 82 வயதாகிறது. என் வாழ் நாளில் இந்த விழாவை நான் தவற விட்டதே இல்லை. எனது உடல்நிலை மோசமடைந்து வருவதால் என்னால் இப்போது தண்ணீருக்குள் சென்று சுத்தம் செய்ய முடிவதில்லை. ஆனாலும் கிராம மக்களுடன் சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கிறேன்'' என்று பெருமிதத் துடன் கூறுகிறார், குலாம் நபி தேவா.