வைட்டமின் டி குறைபாடு: அறிகுறிகளும்.. காரணங்களும்..


வைட்டமின் டி குறைபாடு: அறிகுறிகளும்.. காரணங்களும்..
x

எலும்புகள் வலுவாக இருப்பதற்கு வைட்டமின் டி அவசியம். இது உணவில் இருந்து கால்சியத்தை சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் மற்றும் தசைகள் பலவீனமடைந்துவிடும்.

பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கருமை நிற சருமம் கொண்டவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகுவார்கள். எலும்புகள் மற்றும் தசைகளில் வலி தென்பட்டால் அது வைட்டமின் டி குறைபாட்டிற்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாகும்.

இருப்பினும் சிலருக்கு அறிகுறிகள் உடனடியாக வெளிப்படாது. உடலில் வைட்டமின் டி குறைந்து கொண்டிருந்தால் இதய நோய் ஏற் படக்கூடும். அறிவாற்றல் குறைபாடு, எலும்பு, மூட்டுகளில் வலி, ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

சூரிய ஒளியில் இருந்து உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கும் என்பதால் காலை வேளையில் சில நிமிடங்களாவது நேரடியாக சூரிய ஒளி உடலில் படும் இடங்களில் நிற்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகளை கூட காலை 7 மணிக்குள் சூரிய ஒளிக்கதிர் வீசும் இடங்களில் சில நிமிடங்களில் வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.

இருப்பினும் நிறைய பேர் சூரிய ஒளியை நேரடியாக பார்க்காமல் வீட்டுக்குள்ளும், அலுவலகத்திற்குள்ளும் முடங்கி விடுகிறார்கள். ஏ.சி. அறைக்குள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். தினமும் சூரிய ஒளி போதுமான அளவு உடலின் மீது விழாவிட்டால் அது வைட்டமின் டி குறைபாட்டுக்கு வழிவகுத்துவிடும்.

வயது அதிகரிக்கும்போது சிறுநீரகங்களால் வைட்டமின் டி-ஐ அதன் செயல் வடிவத்திற்கு மாற்ற முடியாது. அதுவும் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கு காரணமாகிவிடும். ரத்தத்தில் இருந்து கொழுப்பு செல்கள் மூலம் வைட்டமின் டி பிரித்தெடுக்கப்படுகிறது. 30 அல்லது அதற்கு மேற்பட்ட உடல் நிறை குறியீட்டெண் (பி.எம்.ஐ) உள்ளவர்கள் தங்கள் உடலில் குறைந்த ரத்த அளவை கொண்டுள்ளனர். அதனால் வைட்டமின் குறைபாடு ஏற்படக்கூடும்.

மென்மையான சருமம் கொண்டிருப்பவர்களை காட்டிலும் கருமையான சருமம் கொண்ட வயதானவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதும், போதுமான சூரிய ஒளி உடலில் படுவதும் வைட்டமின் டி குறைபாட்டை போக்கும். என்றாலும், வைட்டமின் டி மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்படி உட்கொள்ளலாம்.


Next Story