பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பயனுள்ள பாத்திரங்கள்


பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பயனுள்ள பாத்திரங்கள்
x

பல்வேறு வகையான பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்தாலும் அவை பாதுகாப்பானதா? ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? அல்லது தீங்கு விளைவிக்குமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

அறிவியலின் வளர்ச்சியால், மனிதர்களும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர். தொழில்நுட்பம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. நவீன யுகத்திற்கு ஏற்ப மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களும் புதிய மாற்றங்களை கண்டு கொண்டிருக்கின்றன. 'மாடுலர் கிச்சன்' வரவால் சமையல் அறை புதுப்பொலிவு பெற்றுவிட்டது. பாத்திரங்களும் புது வடிவம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஏனெனில் தற்போது பயன்படுத்தும் பாத்திரங்களை விட முன்னோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் பலரும் பண்டைய கால பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். உடல் ஆரோக்கியத்தின் மீது எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத பாத்திரங்களை பற்றிய தொகுப்பு இது.

செம்பு: கிராமப்புறங்களில் இன்றளவும் குடிநீரைச் சேமித்து வைக்க செம்பு பாத்திரங்களை பயன்படுத்தும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. தாமிரத்தால் செய்யப்பட்ட இந்த பாத்திரங்கள் ஹீமோகுளோபினை அதிகரித்து, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் ஆற்றலை கொண்டவை. செரிமானத்தை மேம்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும்.

புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை செம்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கக்கூடாது. அதேபோல் செம்பு பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துவது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.

எஃகு: உணவு பொருட்களை பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் பொருத்தமான உலோகங்களில் இதுவும் ஒன்றாகும். எஃகில் சேமிக்கப்படும் உணவுகள், எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடியவை. ஏனெனில் எஃகு எதிர்வினையற்ற பண்புகளைக் கொண்டது.

அலுமினியம்: இது பொருட்களை விரைவாக சூடாக்கும். இருப்பினும், அலுமினியத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் தக்காளி மற்றும் வினிகர் போன்ற அமிலத்தன்மை கொண்ட உணவு களுடன் வினைபுரிந்து உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே கவனமாக கையாள வேண்டும்.

கண்ணாடி: கண்ணாடியால் செய்யப்பட்ட பாத்திரங்களில் ரசாயனங்கள் கலந்திருக்காது. வாசனையோ, சுவையோ இருக்காது. எனவே கண்ணாடி பாத்திரங்களில் உணவு பொருட்களை சேமித்து வைப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

வெள்ளி: வெள்ளி பாத்திரங்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதைப் பயன்படுத்துவது பித்த குறைபாடுகளை நீக்கும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். மனநிலையையும் மேம்படுத்தும்.

பித்தளை: பித்தளை பாத்திரங்களில் ஈயம் பூசப்பட்டால் மட்டுமே அவை பயன்படுத்த ஏற்றவை. இந்த உலோகத்தை சூடாக்கும் போது உப்பு மற்றும் அமில தன்மை கொண்ட பொருட்களுடன் வினைபுரியும். எனவே பித்தளை பாத்திரங்களில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். பித்தளை பாத்திரங்களை உணவு பரிமாறுவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

இரும்பு: இரும்பில் தயாரிக்கப்படும் தோசைக்கல், தவா போன்றவற்றை பயன்படுத்துவது உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம் படுத்தும். ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும் உதவும். செம்பு பாத்திரத்தை போலவே இதிலும் புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை வைக்கக்கூடாது. அவை எதிர் வினையாற்றலாம். காய்கறிகளின் நிறத்தை கருமையாக்கலாம்.


Next Story