டிரையம்ப் டைகர் 1200
பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான டிரையம்ப் நிறுவனம் டைகர் 1200 என்ற பெயரில் புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
சாகச பயணங்களை விரும்புவோருக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜி.டி. புரோ மற்றும் ரேலி புரோ என்று இரண்டு மாடல்கள் வந்துள்ளன. மோட்டார் சைக்கிளுக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கும் வகையில் மிகப் பெரிய அளவிலான (30 லிட்டர்) பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் மூலம் சாகச பயணங்களுக்கான மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் டிரையம்ப் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
ஏற்கனவே இப்பிரிவில் டைகர் ஸ்போர்ட் 660, டைகர் 850 ஸ்போர்ட், டைகர் 900 ஜி.டி., டைகர் 900 ரேலி, டைகர் 900 ரேலி புரோ, டைகர் 1200 ஜி.டி. எக்ஸ்புளோரர், டைகர் 1200 ரேலி எக்ஸ்புளோரர் என பல மாடல்கள் வந்துள்ளன. இவை அனைத்துமே சாகச பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவையாகும். சவுகரியமான பயணத்தை உறுதி செய்வதற்கேற்ப அனைத்து வாகனங்களிலும் நவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. கரடு, முரடான சாலைகளில் பயணிக்க ஏற்ற வகையில் உறுதியானவையாகவும் இவை உள்ளன.
இவை 1,160 சி.சி. திறன் கொண்டது. சீறிப் பாயும் வகையில் வாகனத்தின் எடை 25 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. இது 150 பி.எஸ். திறனை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். முந்தைய மாடல்களை விட இதன் திறன் 9 பி.எஸ். அதிகமாகும். இதில் புதிய ரக டைனமிக் செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 6 விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன. சாவி தேவைப்படாத தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. ஸ்மார்ட்போன் மூலமே வாகனத்தை இயக்க முடியும். அதேபோல இதை பூட்டவும் முடியும். புதிய எல்.இ.டி. விளக்கு மற்றும் பகலில் ஒளிரும் விளக்கு, அடாப்டிவ் கார்னர் விளக்கு ஆகியன இதற்கு சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது. டயரின் காற்று அளவை காட்டும் மானிட்டர், ஷிப்ட் அசிஸ்ட் வசதி கொண்டது. குளிர் பகுதிகளில் பயணிக்கும் போது இருக்கைகள் குளிர்ந்து போவதைத் தவிர்க்கும் வகையில் வெப்பத்தை உமிழும் வகையில் சிறப்பு இருக்கைகளைக் கொண்டது.
டியூப்லெஸ் டயருடன் வயர் ஸ்போக் சக்கரங்கள் இதன் சிறப்பம்சமாகும். டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி மற்றும் ஏ.பி.எஸ். கொண்டது. மேலும் 7 அங்குல டி.எப்.டி. தொடு திரை இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் வசதி வாகனத்தின் செயல்பாடுகளை துல்லியமாகக் காட்டும். மேலும் மை டிரையம்ப் கனெக்டிவிடி செயலியானது வாகனத்தின் மேம்பட்ட செயல்பாடுகளுக்கு உதவுகிறது.