'திருநங்கை' ஆசிரியர்...!
ஒரு திருநங்கை, பல போராட்டங்களுக்கு பிறகு ஆசிரியராக உயர்ந்த உண்மை சம்பவத்தை இந்த கட்டுரை வாயிலாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
எல்லா திருநங்கைகளுக்கும், சமூக அந்தஸ்துள்ள வேலை கிடைக்கும்போது, அவர்களது குடும்பத்தினரும் அவர்களை இயல்பானவர்களை போல அரவணைப்பார்கள்.
''இன்றைய சூழலில், பெண்கள் மற்றும் ஆண்கள் ஆசிரியர் பணி பெறுவதே சவாலான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொருவரும் பல கட்ட போட்டிகளை கடந்து, பல போராட்டங்களை எதிர்கொண்டுதான் ஆசிரியர் பணி பெறுகிறார்கள். ஆண்-பெண் இவர்களுக்கு இப்படி ஒரு போராட்ட நிலை என்றால், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த திருநங்கைகளின் நிலையை சிந்தித்து பாருங்கள். படிப்பு இருந்தும், நல்ல திறமை இருந்தும், சமூகத்தை சகித்துக்கொள்ளக்கூடிய பொறுமை இருந்தும், 'திருநங்கை' என்ற ஒரே காரணத்திற்காக, பலமுறை நேர்காணலில் இருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறேன். அத்தகைய சமூகத்தை நினைத்து வருத்தப்படுவதா..? இல்லை திருநங்கை என்று தெரிந்தும் இப்போது ஆசிரியர் பணி வழங்கியிருக்கும் புது சிந்தனை கொண்ட சமூகத்தை நினைத்து பெருமைப்படுவதா..? என்று தெரியவில்லை'' என்கிறார், திருநங்கை ஆசிரியர் சஹானா.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூர் கிராமத்தை சேர்ந்தவரான இவர், எம்.எஸ்சி., எம்.எட் படித்திருக் கிறார். இப்போது சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் உள்ள செயிண்ட் வின்செண்ட் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.
''உடலில் நிகழ்ந்த மாற்றங்களை எனக்குள்ளே மறைத்துக்கொண்டு, ஆசிரியராகும் விருப்பத்துடன், எம்.எஸ்சி., எம்.எட்., படித்து முடித்தேன்.
ஒருகட்டத்தில் உடல் மற்றும் உணர்வுகளின் மாற்றத்திற்கு ஏற்ப பெண்ணாக மாற்றிக்கொண்டு ஏராளமான பள்ளிகளில் விண்ணப்பித்தேன். 30-க் கும் மேற்பட்ட டெலிபோன் நேர்காணலில் பங்கேற்று இருக்கிறேன்.
முதல் 5 நிமிடங்கள், பாசிட்டிவாக இருக்கும். என்னை பற்றிய தகுதி விவரங்களை காதுக் கொடுத்து கேட்பார்கள். நன்றாக பேசுவார்கள். ஆனால் நான் ஒரு திருநங்கை என்று வெளிக்காட்டியவுடன், அவர்களது பேச்சில் மாற்றம் தெரியும். நிர்வாகத்திடம் யோசனை கேட்டுவிட்டு அழைப்பதாக அழைப்பை துண்டுத்துவிடுவார்கள்'' என்று வேதனைப்படும் சஹானா, 2 வருட போராட்டங்களுக்கு பிறகு மரக்கா என்பவரின் வழிகாட்டுதலோடு, பல்லோட்டி பள்ளியை அணுகி இருக்கிறார். அவர்கள் சஹானாவின் பாலின அடையாளத்தை பெரிதுபடுத்தாமல், ஆசிரியர் பணி வழங்கி இருக்கிறார்கள்.
''நீண்ட போராட்டத்துக்குபின் இந்த பள்ளியில் பணிவாய்ப்பு கிடைத்தது. முதலில் அலுவலகப் பணியாளராக பணியாற்றிவிட்டு, வாரத்துக்கு 2 வகுப்புகள் மட்டும் எடுக்க அனுமதித்தனர். அதில் சிறப்பாக செயல்பட்டதால் 9, 10-ம் வகுப்புக்கு அறிவியல் ஆசிரியையாக நியமிக்கப்பட்டுள்ளேன். மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியராக நின்றுகொண்டு, பாடம் எடுப்பதை என் வாழ்வின் பொக்கிஷமாக கருதுகிறேன்'' என்றவரிடம், மாணவர்களும், சக ஆசிரியர்களும் உங்களை ஏற்றுக்கொண்டனரா..? என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர்...
''ஒரு திருநங்கை ஆசிரியராக பாடம் எடுப்பது, மாணவர்களுக்கு ரொம்பவும் புதிதான ஒன்று. அவர்கள் அதுவரை ஆண்களையும், பெண்களையுமே ஆசிரியர்களாக பார்த்திருப்பார்கள். இருபாலரிடம் மட்டுமே பழகி இருக்கிறார்கள். அதனால் திருநங்கையான என்னை ஆசிரியராக ஏற்றுக்கொள்வதில், மாணவர்களிடம் சில தயக்கங்கள் இருந்தன. ஏன்..? ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு நெருடல் இருந்தது. அதன்பின் நான் கடந்து வந்த பாதையை எடுத்துக் கூறி அவர்களிடம் இயல்பாக பழக ஆரம்பித்தேன்.
தற்போது மாணவர்கள் மட்டுமில்லாது சக ஆசிரியர்கள் உட்பட பள்ளியில் அனைவரும் எனக்கு உரிய மரியாதை வழங்கி சமமாக பழகுகின்றனர். இத்தகைய மாற்று சிந்தனை கொண்ட சமூகத்தினருடன் சேர்ந்து பணியாற்றுவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னை பொறுத்தவரை ஒரு அறிவியல் ஆசிரியராக ஆண், பெண் என இருபாலரின் பிரச்சினையையும் புரிந்துகொள்ள முடியும். அதனால் அறிவியல் பாடத்திட்டங்களில் வரும் ஆண்-பெண் பாலினம் தொடர்பான பாடங்களை, மூன்றாம் பாலினத்தவர் என்ற நிலையில் இருந்து புதுமையாக விளக்கி பாடம் நடத்த முடிகிறது'' என்று, ஒரு ஆசிரியராக பெருமைப்படுகிறார்.
''பொது சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய முழுமையான புரிதல் இருப்பதில்லை. அதுவே, திருநங்கைகள் மேம்பாட்டுக்கு தடையாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். திருநங்கைகள், கடுமையாக உழைக்கவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போதுதான் தவறான பாதைகளில் பயணிக்கிறார்கள்.
மூன்றாம் பாலினத்தில் பலர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். அவர்களின் திறமையை, அறிவை நிச்சயம் அங்கீகரிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். எங்களை போன்றவர்களை முன்மாதிரியாக வைத்து பலரும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
எல்லா திருநங்கைகளுக்கும், சமூக அந்தஸ்துள்ள வேலை கிடைக்கும்போது, அவர்களது குடும்பத்தினரும் அவர்களை இயல்பானவர்களை போல அரவணைப்பார்கள். மேலும், ஒரு ஆசிரியராக எனது மாணவர்களின் முன்னேற்றத்துக்கும் வழிகாட்டுதலாக இருப்பேன்'' என்கிறார்.
முன்னேறி வரும் மூன்றாம் பாலினம் என்பதற்கான அடையாளங்களாக சஹானாக்கள் திகழ்கின்றனர். பொது சமூகத்தின் அக்கறை அவர்களின்பால் திரும்புவதும் அவர்களை இன்னும் உயர்த்துவதும் காலத்தின் கட்டாயம்.