அதிகம் தூங்கினாலும் ஆபத்து


அதிகம் தூங்கினாலும் ஆபத்து
x

தூக்கமின்மை பொதுவான உடல் நல பிரச்சினையாக மாறி வருகிறது. உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு குறைந்தது 6 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

அதேவேளையில் அதிக நேரம் தூங்குவதும் தவறு. நிறைய பேர் வார இறுதி நாட்களில் வழக்கத்தை விடகூடுதலான நேரம் தூங்குவார்கள். அதே போன்று தினமும் அதிக நேரம் தூங்குவது மருத்துவ ரீதியாக ஆபத்தானது. தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, ​​எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை காரணமாக 25 வயதிற்குட்பட்டவர்கள் இதய செயலிழப்பு, பக்கவாதத்தை எதிர் கொண்டு இறக்கிறார்கள்.

ஆய்வின்படி, இரவில் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களை விட, ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 23 சதவீதம் அதிகம்.

மேலும் பகலில் 30 நிமிடங்களுக்கு குறைவாக தூங்குபவர்களை விட, 90 நிமிடங்கள் தூங்கு பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 25 சதவீதம் அதிகம்.

நீண்ட நேரம் தூங்குபவர்கள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 82 சதவீதம் அதிகம். அதிகப்படியான தூக்கத்திற்கும், பக்கவாதத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் அதிகமாக தூங்குபவர்களுக்கு கொழுப்பு அளவு அதிகரிக்கும். இது எடை அதிகரிப்பதற்கும், பக்கவாதம் ஏற்படுவதற்கும் வழிவகுத்து விடும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் பக்கவாத அபாயத்தை 80 சதவீதம் தவிர்த்துவிடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை இவை மூன்றையும் கண்காணிக்க வேண்டும். இவை சீராக இருந்தால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை தடுத்துவிடலாம்.


Next Story