பேராசிரியை வளர்க்கும் 'குளுகுளு' தோட்டம்


பேராசிரியை வளர்க்கும் குளுகுளு தோட்டம்
x

வீட்டிலேயே 1,500 செடிகளை வளர்த்து ராஜஸ்தானின் அனல் பறக்கும் வெப்பமான கால நிலையை முறியடித்து வீட்டுக்குள் குளிர்ச்சியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார் பாருல் சிங்.

அங்குள்ள கோட்டா நகரில் வசிக்கும் இவருக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை தோட்டக்கலை குறித்து எதுவும் தெரியாது. ஒருமுறை தன் மகன் மிமோசா தாவரங்கள் பற்றி கேட்ட கேள்விக்கு, நர்சரிக்கு நேரில் அழைத்து சென்று பதில் அளித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு தோட்டக்கலை மீது ஆர்வம் ஏற்பட்டது.

முதலில் 12 செடிகள் வாங்கி வந்து வீட்டில் வளர்க்க தொடங்கினார். இன்றைக்கு அவர் வீட்டில் வளரும் செடிகளின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து பாருல் சொல்ல கேட்போம்.

"எனக்கு சிறு வயதிலிருந்தே செடிகள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. எனினும் இது குறித்த அனுபவம் கிடையாது. அப்போது நாங்கள் வசித்த வாடகை வீடு கீழ்த் தளத்தில் இருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் செடிகளை வளர்த்தோம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வீடு கட்டிய போது, பெரிய அளவில் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. என் மகன் ரூபத்தில் அந்த கனவு நிறைவேறி இருக்கிறது.

மாடியிலும், வீட்டின் முகப்பு பகுதியிலும் நிறைய இடங்கள் இருப்பதால், அதிக அளவில் செடிகளை வளர்க்க முடிகிறது. மாடியில் மட்டும் ஆயிரம் சதுர அடி இடம் இருக்கிறது. அதில் ஏராளமான தாவரங்களை வளர்க்கிறோம். அதில் லில்லி மற்றும் தாமரையும் அடங்கும். காய்கறிகள் மற்றும் அலங்கார செடிகளையும் பயிரிட்டுள்ளேன்.

நாங்கள் வசிக்கும் கோட்டா மிகவும் வெப்பமான பகுதியாகும். இருந்தாலும், நிறைய செடிகள் வளர்ப்பதால் என் வீடு முழுவதும் குளுகுளுவென்று இருக்கும். கல்லூரி பேராசிரியையாக பணியாற்றிய நான், இரண்டாவது குழந்தை பிறந்ததும் வேலையில் இருந்து விலகிவிட்டேன்.

வீட்டில் இருக்கும்போது எதிர்காலம் குறித்து சிந்திப்பேன். மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் தோட்டத்துக்கு வந்துவிடுவேன். இந்த தோட்டம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தோட்டக்கலை தொடர்பான பல போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன்" என்றார்.


Next Story