ரக்பி விளையாட்டில் எதிரிகளை பந்தாடும் பழங்குடியின படை..!
பழங்குடியின இளைஞர்களை ஒரு அணியாக ஒன்று சேர்த்து, இங்கிலாந்தில் நடைபெற்ற ‘டூர் எய்ட் நேஷன்ஸ்’ ரக்பி போட்டியில் பரிசு வென்றதைதான், திரைப்படமாக்கி இருந்தனர்.
கடந்த மாதம், ஜங்கிள் கிரை என்ற திரைப்படம் ஆன்லைன் தளத்தில் வெளியாகி இருந்தது. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். அதாவது, பழங்குடியின இளைஞர்களை ஒரு அணியாக ஒன்று சேர்த்து, இங்கிலாந்தில் நடைபெற்ற 'டூர் எய்ட் நேஷன்ஸ்' ரக்பி போட்டியில் பரிசு வென்றதைதான், திரைப்படமாக்கி இருந்தனர். இந்த உண்மை சம்பவத்திற்கு வித்திட்ட, பால் வால்ஷ், வெற்றி குறித்தும், இந்த திரைப்படம் குறித்தும் என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம்.
''ஒடிசா பழங்குடியின குழந்தைகளை முன்னேற்றுவதுதான் என்னுடைய லட்சியமாக இருந்தது. அவர்கள் கல்வியைவிட, விளையாட்டில் அதிக ஆர்வமாக இருந்ததால், ரக்பி மூலமாக முன்னேற்ற திட்டத்தை செயல்படுத்தினேன்.
2004-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள எனது நண்பர்களுடன் இணைந்து ரக்பி கிளப்பை தொடங்கினேன். மேலும், விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவளிக்க 'ஜங்கிள் க்ரோஸ்' அறக்கட்டளையை நிறுவினேன். நிறைய ஆர்வமுள்ள இளைஞர்களைக் கண்டுபிடித்தோம்.
லண்டன் சர்வதேச போட்டிக்கு 60 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. விளையாட்டு, தந்திரங்கள் மற்றும் உடற்தகுதி பற்றி கற்பிக்கப்பட்டது. இறுதியாக 12 பேர் இந்தக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
லண்டனில் நடைபெற்ற டூர் எய்ட் நேஷன்ஸ் கோப்பை போட்டிக்கு இவர்களை நிச்சயம் அழைத்துச் செல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்பினேன். உடற்பயிற்சிகூடம் வசதி இல்லாமல் இருந்தபோது, சிற்றோடைகளில் நீந்துவது மற்றும் மரங்களில் ஏறுவது போன்றவற்றை பயிற்சியாக செய்து தங்கள் வலிமையை அதிகரித்துக் கொண்டனர்.
பயிற்சி தொடங்கிய சில மாதங்களிலேயே அவர்கள் கொல்கத்தாவிலிருந்து லண்டன் போட்டிக்குப் பயணமானார்கள். ஜாம்பியா, ருமேனியா, கென்யா அணிகளை வீழ்த்திய இந்த இளம் இளைஞர்கள், தென்னாப்பிரிக்கர்களுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடினர். இவர்களது கதையே, தற்போது திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. அந்த அணிக்கு பிறகு, இப்போது திறமையான 10 அணிகளை உருவாக்கி இருக்கிறோம்" என்றார்.