சென்னையில் செருப்பு தைக்கும் தொழில் தேய்ந்து போனது... தொழிலாளர்கள் எங்கே என்று தேடும் நிலை
பிய்ந்துபோன செருப்பை உடனே தூக்கி எறிவதால் செருப்பு தைக்கும் தொழில் தேய்ந்து போய் உள்ளது.
சென்னை,
தேய்ந்துபோன செருப்பு தைக்கும் தொழில்
முற்கள், கற்கள், கம்பி போன்ற கூர்மையான பொருட்கள் கால் பாதங்களை பதம் பார்க்காமல் பாதுகாக்கும் கேடயமாக கருதப்படும் காலணிகள் (செருப்பு) இன்றைக்கு அழகுசாதன பொருட்கள் பட்டியலில் இணைந்துள்ளன.
ஆரம்பத்தில் சிலவகை மாடல்களில் மட்டும் செருப்புகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த செருப்புகள் மிய்ந்து போனால் மீண்டும் மீண்டும் தைத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரையில் சென்னை அண்ணாசாலை, சென்டிரல் ரெயில் நிலைய வெளிப்பகுதி போன்ற இடங்களில் வரிசையாக அமர்ந்து ஷூவுக்கு பாலீஷ் போடுவது, செருப்பு தைப்பது என்று செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் மிகவும் பிசியாக இருந்து வந்தனர்.
தற்போது செருப்புகள் பல்வேறு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த செருப்புகள் அறுந்து போனால் அடுத்த நொடியே தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பை வாங்கி பயன்படுத்தும் கலாசாரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிய்ந்த செருப்பை தைத்து போடுவதை கவுரவ குறைச்சலாக கருதுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதனால் செருப்பு தைக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது.
பிய்ந்த செருப்பை தைத்து பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. செருப்பை போன்று தங்களுடைய தொழிலும் தேய்ந்து போய்விட்டது என்பது இந்த தொழிலை தாங்கி பிடித்து வரும் தொழிலாளர்களின் மனநிலையாக இருக்கிறது.
எம்.ஜி.ஆரின் கருணை குணம்
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் எதிரே 45 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளி எம்.எத்திராஜ் (59) கூறியதாவது:-
செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு பெட்டிக்கடை போன்று கடை ஏற்படுத்தி தந்தவர் எம்.ஜி.ஆர். அவருடைய கருணை மூலம் எனக்கு இந்த கடை 22.7.1982 அன்று கிடைத்தது. அதற்கு முன்பு சாலையோரம் அமர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தேன்.
எனது தந்தையும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்ததால், நானும் இந்த தொழிலை கற்றுக்கொண்டேன். இந்த தொழிலில் எனக்கு 45 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தபோது என்னிடம் ஜிப் வைத்த ஷூ தைத்து வாங்கி இருக்கிறார்.
வருங்காலம் என்னவாகும்?
அன்றைய கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட செருப்புகள் நீண்டகாலம் உழைத்தன. செருப்புக்கு பணத்தை செலவு செய்வதா என்ற மனநிலையில் அவை பிய்ந்து போனாலும் தொடர்ந்து மக்கள் தைத்து பயன்படுத்தி வந்தார்கள். தற்போது பண்டிகை காலங்களில் புதிதாக வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது போன்று அப்போது செருப்புகள் வாங்குவதையே பலர் சந்தோஷமாக பார்த்தனர். ஆனால் இன்றைக்கு நினைத்த நேரத்தில் புதிய செருப்பை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இன்றைக்கு விற்பனை செய்யப்படும் 'ரெடிமெட்' செருப்புகள் தரமாக இருப்பது இல்லை. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகவும் இல்லை. முன்பெல்லாம் ஷூவுக்கு பாலீஷ் போட வரிசை கட்டி நிற்பார்கள். தற்போது வீட்டிலேயே பாலீஷ் போட்டுக்கொள்கிறார்கள். செருப்பு தைக்க யாராவது வரமாட்டார்களா என்று எதிர்நோக்கி காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்த தொழிலால் வாழ்க்கையை ஓட்ட முடியாமல் பல தொழிலாளர்கள் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். என்னை போன்ற ஒரு சில தொழிலாளர்கள்தான் இந்த தொழிலில் இருக்கிறோம். இந்த தொழில் என்னுடன் போகட்டும் என்று எனது மகனை கஷ்டப்பட்டு பட்டப்படிப்பு படிக்க வைத்தேன். தற்போது அவன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். எனவே எங்கள் காலத்துக்கு பின்னர் செருப்பு தைக்கும் தொழில் இருக்குமா என்பது சந்தேகமே. வருங்காலங்களில் செருப்பு பிய்ந்துவிட்டால் மக்களே தைத்து பயன்படுத்தும் நிலைமை வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீன தயாரிப்பு செருப்புகளால்...
சென்னை வடபெரும்பாக்கத்தில் செருப்பு தைக்கும் தொழிலை செய்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் தாஸ் கூறியதாவது:-
நான் 7 ஆண்டுகளுக்கு மேலாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் போன நேரத்தில் தேய்ந்துபோன இந்த தொழில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ஏழை-எளிய, நடுத்தர மக்கள்தான் பிய்ந்துபோன செருப்புகளை தைத்து பயன்படுத்துவார்கள். தற்போது அவர்களும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் செருப்புகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
தற்போது இந்த தொழில் குடும்பத்தை நடத்துவதற்கு கைகொடுப்பது இல்லை. எனவே தையல் எந்திரத்தை வாங்கி அதன் மூலம், கிழிந்த துணிமணிகளை தைத்து கொடுத்து வருகிறேன். முன்பு ஷூவுக்கு பாலீஷ் போடுவது, புதிய செருப்புக்கு மேல் தையல் போடுவது என்று ஓரளவு வருமானம் வந்தது. அப்போது பீகாரில் இருந்து எனது குடும்பத்தை இங்கு அழைத்துவரலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் தற்போது சொற்ப வருமானம் மட்டும் கிடைப்பதால் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலாளர்கள் எங்கே போனார்கள்?
சென்னை பாடியை சேர்ந்த வியாபாரி ஆனந்த் கூறியதாவது:-
சின்ன வயதில் செருப்பு பிய்ந்து போய் விட்டால் வீட்டில் அடி விழும். அதற்கு பயந்து செருப்பை கழற்றி வைத்துவிட்டு விளையாடுவோம். வளர்ந்த பின்னர் செருப்பு பிய்ந்து விட்டால் உடனே புதிதாக வாங்குவதற்கு மனம் வராது.
உடல்நிலை சரியில்லாதவர்கள் டாக்டரிடம் செல்வது போன்று பிய்ந்த செருப்பை கையில் தூக்கிக்கொண்டு செருப்பு தைக்கும் தொழிலாளிடம் செல்வோம். தோல் செருப்பில் ஆணியை அடித்து தொழிலாளி பிய்ந்துபோன தடம் தெரியாமல் தைத்து தருவார். அந்த செருப்பு தேயும் வரையில் பயன்படுத்துவோம்.
அப்போது வாகன உதிரிபாகங்கள் போன்று செருப்பின் வார் போன்ற பாகங்கள் தனித்தனியாக விற்பனை செய்யப்படும். இன்றைக்கு செருப்பு பிய்ந்து போய்விட்டால் செருப்பு தைக்கும் தொழிலாளர்களை தேடுவதே மிகவும் சிரமமாக இருக்கிறது. பாடி மேம்பாலத்தின் கீழே 2 பேர் நீண்ட காலம் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் செருப்பு பிய்ந்துவிட்டால் ஒருமுறை பயன்படுத்தும் பொருள் போன்று ஆகிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.