பன்முக திறமைகளால் ஜொலிக்கும் 'குழந்தை நட்சத்திரம்'
11 வயதிற்குள் பல கலைகள் பயின்று அதில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறார் கள்ளக்குறிச்சியை சேர்ந்த யுவஸ்ரீ.
பரதம், ஸ்கேட்டிங், ஹூலா ஹூப், பேட்மிண்டன், சிலம்பம், யோகா... என 6-ம் வகுப்பு பயிலும் யுவஸ்ரீ யாஷிகாவின் தனித்திறன் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது. 5 வயதிலிருந்தே, பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சிகளில் ஆர்வம் காட்டுபவர், 11 வயதிற்குள் பல கலைகள் பயின்று அதில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறார். இது தொடர்பாக, கள்ளக்குறிச்சியை சேர்ந்த யுவஸ்ரீயை சந்தித்து பேசினோம். அவர் மழலை மொழியில் பகிர்ந்து கொண்டவை....
''விவரம் தெரிய ஆரம்பித்த வயது முதலே, புதிது புதிதாக கற்க வேண்டும் என்ற தேடல் இருந்தது. அதனால் நிறைய கலைகளை கற்க தொடங்கினேன். 5 வயதிலேயே, பரதம் கற்க ஆரம்பித்தேன். அதுதான், கலை ஆர்வத்தை எனக்குள் அதிகப்படுத்தியது. அதற்கு பிறகு, சக்கர காலணிகள் அணிந்து சறுக்கும் ஸ்கேட்டிங் கற்க ஆசைப்பட்டேன். அதன் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் வேளையிலேயே, பேட்மிண்டன் மீதும் ஆர்வம் பிறந்தது. அதையும் முறையாக கற்க தொடங்கினேன். அதன்பிறகு, கொரோனா ஊரடங்கில் யோகா மற்றும் சிலம்பம் கற்றுக்கொண்டேன்'' என்று வரிசை மாறாமல், கற்றுக்கொண்ட வித்தைகளை பட்டியலிடும் யுவஸ்ரீ, இந்த கலைகளில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறார்.
''கலைகளை கற்பதுடன் நில்லாமல், அந்த கலை திறனை மாவட்ட அளவிலான போட்டிகளில் சோதிக்க தொடங்கினேன். ஸ்கேட்டிங், பேட்மிண்டன் மற்றும் சிலம்ப கலையில், மாநில அளவிலான போட்டிகளிலும் வென்றிருக்கிறேன். மேலும் நான் கற்றிருக்கும் கலைகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி, அதன்மூலம் புதுமையான சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறேன்'' என்றவர், சமீபத்தில்கூட புதுமையான முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். அதாவது கால்களில் சக்கர காலணிகளை அணிந்தபடி, ஸ்கேட்டிங் செய்துகொண்டே பரதம் ஆடி அசத்தி இருக்கிறார்.
''புதுமையானதை முயன்று பார்க்கும் நோக்கில்தான் இப்படியான புதுமைகளில் ஈடுபடுகிறேன். இதற்கு முன்பு, பானை மீது ஏறி நின்று பரதம் ஆடினேன். பிறகு, உடல் பாகங்களில் வளையம் சுற்றும் விளையாட்டான ஹூலா ஹூப் கலையுடன், ஸ்கேட்டிங் செய்தேன். அதேபோல ஸ்கேட்டிங் செய்து கொண்டே பேட்மிண்டனும் விளையாடி இருக்கிறேன். யோகா கலையுடன், சிலம்ப கலையையும் ஒருசேர முயற்சித்திருக்கிறேன். இப்படி நான் பயின்ற கலைகளை ஒன்றுடன் ஒன்று, இணைத்து சாகசம் செய்வதையே, என்னுடைய தனித்துவமாக கருதுகிறேன்'' என்று பொறுப்பாக பேசும் யுவஸ்ரீயின் முயற்சிகளுக்கு, பல்வேறு சாதனை சான்றிதழ்களும்,விருதுகளும் கிடைத்திருக்கின்றன.
''ஜெய்ப்பூரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான பரத போட்டிக்கு தயாராகி வருகிறேன். அதேசமயம் பரதம் மற்றும் ஸ்கேட்டிங் கலைகளில் வேறு என்ன புதுமைகளை படைக்க முடியும் என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய முயற்சிகளுக்கும் பெற்றோர் வித்யா மற்றும் சிவகுமார் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பும், ஊக்கமும்தான் என்னை உற்சாகமாக இயங்க வைக்கிறது. அதேபோல எனக்கு பல கலைகளை பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களுக்கும், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றவர், படிப்பிலும் படுசுட்டியாகவே திகழ்கிறார்.
''செல்போன் மோகத்துக்குள் சிக்காமல் இருப்பதே, என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது. நான் மட்டுமின்றி, என்னுடைய தோழிகளுக்கும் இந்த அறிவுரையை வழங்குகிறேன். சிலர் என்னை முன்மாதிரியாக கொண்டு, அவர்களை பல கலைகளில் பிசியாக வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், நான் பயிற்சிகளுக்காக பல உபகரணங்களை பைக்கில் சுமந்து செல்வதை கண்டு, அவர்களும் திறன் வளர்ப்பு பயிற்சிகளில் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில், அடுத்தவர்களின் முயற்சிக்கு நான் உந்துதலாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.