நடுங்க வைக்கும் உறைபனி நகரம்


நடுங்க வைக்கும் உறைபனி நகரம்
x

ஓமியாகான், பூமியிலேயே மிகவும் குளிரான இடமாக அறியப்படும் இது ரஷியாவில் அமைந்திருக்கிறது.

குளிர்காலம் தொடங்கி விட்டாலே குளிர்ச்சியான சூழ்நிலையை சமாளிப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்வார்கள். நம் நாட்டில் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவே உடலை நடுங்க வைத்துவிடும். ஆண்டு முழுவதும் குளிர் நிலவும் பிரதேசங்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அங்கு குளிர்காலத்தில் நிலைமை படுமோசமாகிவிடும்.

உறைபனி உடலையே உறைய வைத்துவிடும் அளவுக்கு குளிர்ச்சி நிலவும். அப்படிப்பட்ட இடம்தான், ஓமியாகான். பூமியிலேயே மிகவும் குளிரான இடமாக அறியப்படும் இது ரஷியாவில் அமைந்திருக்கிறது. இங்கு மைனஸ் 70 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்ப நிலை இருக்கும் என்பதை வைத்தே அதன் குளிர் சூழலை உணர்ந்து கொள்ளலாம். இயற்கையையே உறைய வைக்கும் அந்த நகரத்தை பற்றிய சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு...

* ரஷிய கூட்டாட்சியின் ஒரு அங்கமான சாகா குடியரசில் ஓமியாகான் நகரம் அமைந்துள்ளது.

* ஓமியாகானின் மக்கள் தொகை ஆயிரத்துக்கும் குறைவுதான். சுமார் 900 பேர் வசிக்கிறார்கள்.

* குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை குறைவது வழக்கம். 1924-ம் ஆண்டு -71.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி அதிர்ச்சி அளித்தது.

* ஜனவரி மாதம்தான் அதிக குளிர் நிலவும் மாதமாக அறியப்படுகிறது. சில சமயங்களில் மைனஸ் 50 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே இருக்கும். அந்த சமயத்தில் வெளியே நடமாடுவது சிரமமானது, சவாலானது.

* மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்போது ஓடுவது சாத்தியமற்றது என்பது உள்ளூர்வாசிகளின் கருத்தாக இருக்கிறது.

* குளிர் சமயங்களில் வாகனங்களை இயக்குவதும் சிரமமானது. ஏனென்றால், பனிக்கட்டிகள் படர்ந்திருக்கும்போது என்ஜின்கள் உறைந்துபோய்விடும். குறைந்த வெப்பநிலையில் அதனை இயக்க முடியாது.

* அங்குள்ள வாகனங்களின் கேரேஜ்களில் ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து என்ஜின் இயங்குவதற்கு துணைபுரிகின்றன.

* ஓமியாகானில் வசிப்பவர்கள் யாராவது இறந்துவிட்டால், பனிக்கட்டிகள் உருகும் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் பனி உறைந்த தரையில் பள்ளம் தோண்டுவது நடைமுறையில் சாத்தியமற்றது.

* குளிர்காலத்தில் மட்டுமல்ல சில காலமாகவே மிகக் குறைந்த வெப்பநிலையே ஓமியாகானில் பதிவாகி வருகிறது.

* ஜனவரியில் தொடங்கும் கடும் குளிர் ஐந்து மாதங்கள் வரை தொடர்ச்சியாக நீடிக்கும். அதனால் ஒரு நாளில் 5 அல்லது 6 மணிநேரம் மட்டுமே பகல் நேரமாக இருக்கும்.

* வீட்டுக்குள் இயல்பாக இருக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் நிலக்கரி மூலம் நெருப்பை உமிழும் சாதனம் இருக்கும். அது 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். அது பரப்பும் வெப்பம்தான் வீட்டுக்குள் மிதமான வெப்பநிலையை உணரவைக்கும். வெளிப்புற பகுதிகளெல்லாம் பனியில் உறைந்து கிடக்கும்.

* நிலக்கரி மூலம் நெருப்பை கக்கும் சாதனம் இல்லாவிட்டால் தண்ணீர் குழாய்கள் உறைந்து போய்விடும். தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

* இங்கு அமைந்திருக்கும் சுரங்கம்தான் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் திறவுகோலாக உள்ளது. இங்கு தங்கம், ஆன்டிமணி உள்பட அரிதான உலோகங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. அங்கு பணி செய்வதும் கடினமானது.

* உள்ளூர் மக்கள் குதிரைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை மேற்கொள்கிறார்கள். மீன் பிடி தொழிலும் நடக்கிறது.

* குளிர்காலத்தில் மண்ணை உறைய வைக்கும் அளவுக்கு பனி சூழ்ந்திருக்கும் என்பதால் விவசாயம் செய்ய முடியாது.

* ஓமியாகானில் வெப்பமான மாதம் எது என்றால் ஜூலை மாதம்தான். அப்போது வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் இருக்கும். மிக குறைந்த வெப்பநிலையாக 6 டிகிரி செல்சியஸ் இருக்கும். அது கூட நம்மூரில் குளிரானதுதான்.


Next Story