பழங்கள் சாப்பிடுவதற்கு சரியான நேரம் உண்டா?
சில பழங்களை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடும் விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.
பழங்கள், ஆரோக்கியமான உணவின் ஒரு அங்கம். அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுபவை. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழ வகைகள் உள்ளன. ஒவ்வொரு பழங்களும் அதன் தன்மைக்கேற்ப ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டிருக்கின்றன. அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப அதிகமாக விளைகின்றன.
இதய நோய் அபாயத்தைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தை பராமரிப்பது, புற்றுநோயை உண்டாக்கும் செல்களை கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு உடல் சார்ந்த நன்மைகளை பழங்கள் வழங்குகின்றன. இருப்பினும் பழங்களை எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது.
பழங்கள் சாப்பிடுவதற்கு சரியான நேரம் உண்டா?
பழங்களை உண்பதற்கு சிறந்த நேரம் இருக்கிறது. மோசமான நேரமும் உண்டு. அந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. இத்தகைய குழப்பம் உலகமெங்கும் நிலவுகிறது. அது ஒரு கட்டுக்கதைதான்.
எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடலாம். அதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் குறைந்து போகாது. எனினும் சில பழங்களை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.
பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டுமா?
தினமும் ஏதாவதொரு பழத்தை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். அவை செரிமான அமைப்பை மேம்படுத்தும். சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனினும் பழங்களை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அப்படிச் சாப்பிடுவது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.
எந்த பழங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்?
ஒருசில பழங்கள் மற்ற பழங்களை விட ரத்தத் தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகப்படுத்திவிடும். இதில் அத்திப்பழம், திராட்சை, மாம்பழம், செர்ரி, வாழைப்பழங்கள் குறிப்பிடத்தக்கவை. அதனால் இவற்றை சர்க்கரை நோயாளிகள் குறைவாகவே உண்ண வேண்டும்.
காலையில் சாப்பிடுவதற்கு சிறந்த பழங்கள் எவை?
சில பழங்களை காலை வேளையில் சாப்பிடுவது சிறந்த நன்மைகளை வழங்கும். குறிப்பாக வாழை, மாம்பழம், தர்பூசணி, அவகேடோ, சப்போட்டா, அன்னாசி, ஆப்பிள் போன்ற பழங்களை காலையில் உட்கொள்ளலாம்.
இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள் எவை?
ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, வாழை, அன்னாசி, மாம்பழம்.
பழங்களில் இருந்து ஊட்டச்சத்தை முழுமையாகப் பெறுவது எப்படி?
பழங்களை சுத்தமாக கழுவி நறுக்கி சாப்பிடுவது, அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை முழுமையாக பெற உதவும். பழச்சாறாக பருகும்போது அதில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் நார்ச்சத்துகள் குறைந்து போவதற்கு வழிவகுக்கும். மேலும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.
உணவுடன் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?
சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருந்தால் உணவு சாப்பிடுவதற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்தோ பழங்களை சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை வேளைதான் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை.
எந்த நேரத்தில் பழங்களை சாப்பிட்டாலும், உடலில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடும் விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.