ஏ.டி.ஏ.எஸ். நுட்பத்தில் ஹாரியர், சபாரி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சபாரி மாடலில் புதிய ஏ.டி.ஏ.எஸ். நுட்ப வசதியை புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக சாலை விபத்துகள் பெரும்பாலும் மனிதத் தவறுகளால் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற மனிதத் தவறுகளால் நிகழும் விபத்துகளைத் தடுக்க உதவும் நுட்பம்தான் ஏ.டி.ஏ.எஸ். எனப்படும். இது டிரைவருக்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும். ஏ.டி.ஏ.எஸ். இருப்பதால் விபத்துகளை பெருமளவு தடுக்கலாம். பாதசாரிகள் சாலையைக் கடப்பதை உணர்த்தி மோதலைத் தவிர்க்க உதவும். லேன் மாறுவதை எச்சரிப்பது, சாலை சிக்னல் விளக்கின் சமிக்ஞைகளை நினைவில் வைத்திருப்பது, அபாயகரமான வளைவுகளை அறிவுறுத்தும் எச்சரிக்கை அறிவிப்புகளை உணர்த்துவது போன்றவை ஏ.டி.ஏ.எஸ்.ன் பணி.
இத்துடன் இதில் 10.25 அங்குல தொடு திரையும் இடம் பெற்றுள்ளது. முந்தைய மாடலில் 8.8 அங்குல தொடு திரை இருந்தது. தற்போதைய மாடலில் 10.25 அங்குல தொடு திரை இடம்பெற்றுள்ளது. அத்துடன் கூடுதல் செயல்திறன் கொண்டவையாகவும் விளங்குகிறது. கிளைமேட் கண்ட்ரோல், வாகன செயல்பாடு குறித்த புள்ளி விவர தகவல் உள்ளிட்ட வற்றை திரையிலேயே தெரிந்துகொள்ளலாம்.
இதில் எக்ஸ்.இஸட். பிளஸ், எக்ஸ்.இஸட்.ஏ பிளஸ் என இரண்டு மாடல்களிலும் வேரியன்ட்டுகள் வந்துள்ளன. வயர் லெஸ் இணைப்பு வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாட்டிலும் செயல்படக் கூடியது. அவசரகால பிரேக்கிங் வசதி, முன்புற மோதல் தவிர்ப்பு எச்சரிக்கை, லேன் மாறினால் அறிவுறுத்துவது, போக்குவரத்து சிக்னல் விளக்குகளை உணர்த்துவது போன்ற வசதிகளைக் கொண்டது.
இவ்விரண்டு மாடல்களிலுமே திறந்து மூடும் வகையிலான மேற்கூரை உள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி கொண்டது. இதில் 2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உள்ளது. இது 170 ஹெச்.பி. திறனையும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். 6 மேனுவல் கியர் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. ஹாரியர் மாடல் விலை சுமார் ரூ.15 லட்சம். பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.24.07 லட்சம். சபாரி மாடல் சுமார் ரூ.15.65 லட்சம். பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.25.01 லட்சம்.