உணவுகளை சேமிக்கும் நீலப் பறவை


உணவுகளை சேமிக்கும் நீலப் பறவை
x

இந்தப் பறவையின் பெயர் தைவான் ப்ளூ மாக்பீ (Taiwan Blue magpie). நீலவண்ணம் போர்த்தி காணப்படும் இந்த அழகிய பறவை, காகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதனை ‘நீண்ட வால் மலை பறவை’ என்று அழைக்கிறார்கள்.

இந்த பறவை, தைவான் நாட்டில் மட்டுமே காணப்படக்கூடிய அரியவகை பறவை இனமாகும். இவை மிகவும் உயரமான பரந்த இலை காடுகளில் வாழும் தன்மை கொண்டவை. இதன் உடல் 63 செ.மீ. முதல் 68 செ.மீ. நீளம் கொண்டது. இதன் வால் 34 செ.மீ. முதல் 42 செ.மீ. நீளமும், இறக்கைகள் 20 செ.மீ. நீளமும் கொண்டதாக இருக்கும். சராசரியாக 260 கிராம் எடையோடு காணப்படும். இந்த பறவையின் இறகுகளில் எந்த வித்தியாசத்தையும் கண்டறிய முடியாது. ஆண், பெண் இரண்டும் ஒரே மாதிரியான இறகுகளோடுதான் காட்சியளிக்கும்.

தலை, கழுத்து, மார்புப் பகுதிகள் கருப்பு நிறத்திலும், கண்கள் மஞ்சள் நிறத்துடனும், அலகும், பாதங்களும் சிவப்பு நிறத்துடனும், மீதமுள்ள உடல் பகுதி, இறக்கை நீல நிறத்திலும் காணப்படும். வாலின் மேற்பரப்பில் நீல நிறமும், அடிப்பகுதியில் கருப்பும், வெள்ளையும் கலந்தும் இருக்கும். இறக்கையின் அடிப்பகுதி சாம்பல் நிறத்திலும், வெளிர் சாம்பல் நிறத்திலும் காணப்படும். இதன் குஞ்சுகள், சாம்பல் நிறத்தில், குறுகிய வால், சாம்பல் மற்றும் நீல நிற கண்களுடன் இருக்கும்.

நம் நாட்டில் காணப்படும் காகங்கள் எப்படியோ, அப்படித்தான் தைவான் நாட்டில் இந்த தைவான் நீல மாக்பீஸ் பறவைகளும். இவை மனிதர்களிடம் மிகவும் நெருக்கமாக பயணிக்கக்கூடியவை. மனிதர் களைக் கண்டு பயப்படுவதில்லை. மலைகளில் அல்லது புதியதாக பயிரிடப்பட்ட நிலங்களில் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே இவை காணப்படுகின்றன.

இந்த இனப் பறவை, கூட்டமாகவே அல்லது 3 முதல் 12 பேர் கொண்ட குழுக்களாகவோ காணப்படும். வானில் பறக்கும்போது, ஒன்றை பின்தொடர்ந்து வரிசையாக பறக்கும் இயல்பு கொண்டவை.

காகத்தைப் போன்றே, இந்த பறவையும் அனைத்துண்ணிகளாகும். பாம்பு, கொறிணிகள், சிறிய பூச்சிகள், முட்டை, பிற பறவைகளின் குஞ்சுகள், தாவரங்கள், பழங்கள், விதைகள் ஆகியவை இவற்றின் முக்கிய உணவுகள். தங்களின் உணவுகளை எதிர்காலத்திற்காக சேமிக்கும் பழக்கம் இவற்றிடம் உண்டு. மீதமான உணவுகளை, சில சமயங்களில் இலைகளால் தரையில் மூடிவைக்கும்.


Next Story