குழந்தை வளர்ப்பு முறையில் மாற்றம் வேண்டும்- மனநல ஆலோசகர் சங்கமித்திரை


குழந்தை வளர்ப்பு முறையில் மாற்றம் வேண்டும்-  மனநல ஆலோசகர் சங்கமித்திரை
x

தற்போதைய வாழ்க்கை முறை குறித்து, மனநல ஆலோசகர் கே.ஜெ.சங்கமித்திரை என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மனஅழுத்தம் ஏற்பட காரணம்

வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியவை தற்போது மாறிவிட்டன. முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. ஆனால், இப்போது பணியின் காரணமாக குடும்பத்தை பிரிந்து தனித்தனியாக வாழத் தொடங்கிவிட்டார்கள். உறவுகளையும் தொடர முடியவில்லை.

தனிமை, பிரிவு, ஏக்கம் இதுபோன்ற காரணங்களால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும், கணவன்-மனைவி இடையே மனம்விட்டு பேச நேரமில்லாத நிலை, பணிபுரியும் அலுவலகத்தில் பிரச்சினை, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நண்பர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினை என்று பலவற்றை காரணமாக கூறலாம்.

தவறான வளர்ப்புமுறை

இப்போது குழந்தை வளர்ப்புமுறை என்பதே தவறாக உள்ளது. குழந்தைகள் எதைக் கேட்டாலும் வாங்கி கொடுக்கிறோம். நாம் குழந்தைகளாக இருந்தபோது, ஒரு பொருளைக் கேட்டால், அது தேவையா என்பதை முதலில் பெற்றோர் பார்ப்பார்கள். அதன்பிறகும், கையில் பணம் இருந்தால்தான் அதை வாங்கி கொடுப்பார்கள்.

அப்படி வளர்க்கப்பட்டதால்தான், நாம் இப்போது ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றாலும், பரவாயில்லை என்று அமைதியாக இருந்துவிடுகிறோம். ஆனால், இப்போதைய குழந்தைகளால் அதுபோன்ற நிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுதான் தவறான வளர்ப்புமுறை.

மனம்விட்டு பேசுதல்

அப்பா கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி வேலை பார்த்து வாங்கி வரும் சம்பளத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை குழந்தைகளுக்கு தாய் சொல்லிக்கொடுக்க வேண்டும். விடுமுறை நாட்களிலாவது தாத்தா-பாட்டி வீட்டுக்கு கொண்டுபோய் விடவேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பார்த்து அவர்கள் பல நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பார்கள்.

மனஅழுத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள், தமது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம்விட்டு பிரச்சினை குறித்து பேசலாம். யாரும் இல்லை என்றால், ஒரு காகிதத்தில் மனதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் எழுதி, பிறகு அதை கிழித்து எறிந்துவிடலாம்.

மனஅழுத்த பரிசோதனை

மனம் அமைதி பெற தினமும் காலை, இரவு இருவேளையும் யோகா செய்யலாம். 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நன்றாக தூங்க வேண்டும். இதனால் மனஅழுத்தம் குறையும். மனஅழுத்த பிரச்சினையில் எங்களிடம் வருபவர்களுக்கு சில பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.

10 முதல் 20 கேள்விகளை அவர்கள் முன்வைக்கிறோம். அதற்கு பதில் அளிப்பதை வைத்தே, அவர்களின் பாதிப்பு அளவு தெரிந்துவிடும். அதன்பிறகு, அவர்களுக்கு கவுன்சிலிங், தெரபி சிகிச்சை ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். அவர்கள் முறையான சிகிச்சை பெற்று மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story