ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பும், வேலைவாய்ப்பும் - ஒரு அலசல்


ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பும், வேலைவாய்ப்பும் - ஒரு அலசல்
x

மிக வேகமாக மாறிவரும் இன்றைய உலக பொருளாதார சூழலில் வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தி, ஆட்டோமொபைல் சார்ந்த தொழிற்சாலைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.

ஆட்டோமொபைல் துறையானது அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால் ஆட்டோமொபைல் படிப்பிற்கு நல்ல வரவேற்பும், ஆட்டோமொபைல் என்ஜினீயர்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது.

அடிப்படையில், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் என்பது மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சாப்ட்வேர், பாதுகாப்பு பொறியியல் ஆகியவற்றை பயன்படுத்தி வாகனங்களை வடிவமைத்து தயாரிப்பது ஆகும். ஒரு காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் ஒரு பகுதியாக ஆட்டோ மொபைல் கல்வி இருந்தது. தற்போது இது தனித்துறையாக உருவெடுத்து இருக்கிறது.

* என்ன சிறப்பு?

மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பஸ்கள், டிரக்குகள் என அனைத்து வகை வாகனங்களின் செயல்பாடுகள் பற்றியும் இப்படிப்பில் விரிவாக படிக்கலாம். வாகன உதிரி பாகங்களை வடிவமைத்து தயாரிப்பதில் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பில் பாடங்களை விட செயல்முறைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, வகுப்பறைகளைக் காட்டிலும் பணிமனைகளில்தான் அதிக நேரம் செலவிட வேண்டியதிருக்கும்.

* என்னென்ன படிப்புகள்?

4 ஆண்டு கால ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பானது ஒருசில கல்லூரிகளில் பி.இ. படிப்பாகவும், சில கல்வி நிறுவனங்களில் பி.டெக் படிப்பாகவும் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இப்படிப்பில் சேருவதாக இருந்தால் பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேருவதாக இருப்பின் அவை நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் எனில் ேஜ.இ.இ. நுழைவுத்தேர்வு அவசியம்.

* சவாலான படிப்பா?

ஆம்...! சவாலான படிப்புதான். ஏனெனில் சுற்றுச்சூழல் மேம்பாடும், எரிபொருள் சேமிப்பும் முக்கியத்துவம் பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் அதற்கேற்ற வாகனங்களை வடிவமைத்து உருவாக்கி மேம்படுத்துவது ஆட்டோமொபைல் என்ஜினீயர்கள் எதிர் கொள்ளும் மாபெரும் சவால்கள்.

மோட்டார் சைக்கிள், கார்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்துவதோடு, என்ஜின்கள், கிளட்சுகள், கியர்கள், பிரேக்குகள், பேட்டரிகள், ஸ்டியரிங்குகள், எரிபொருள் டேங்குகள் என வெவ்வேறு உதிரி பாகங்களை தயாரிப்பது, பழுதுபார்ப்பது, போட்டி மிகுந்த சூழலில் சந்தையின் தேவைக்கேற்ப வடிவமைப்பில் மாற்றங்களை உருவாக்குவது என அவர்களுக்கு பலதரப்பட்ட பணிகள் உள்ளன.

எரிபொருள் சிக்கனம் கொண்ட, குறைந்த மாசு வெளியேற்றக்கூடிய என்ஜின்களை உருவாக்குவது, பழைய கார்களை மறுசுழற்சி செய்து புதிய வாகனங்களை தயாரிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்வது, இளைய தலைமுறையினரின் விருப்பத்துக்கு ஏற்ப நவீன, ஸ்டைலான, சொகுசு கார்களை வடிவமைத்து உருவாக்குவது என தங்கள் திறமையையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் மிகுதி.

* வேலைவாய்ப்பு உண்டா?

இன்றைய நிலையில், ஆட்டோமொபைல் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள், கார்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வாகன சேவை மையங்கள், என்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், சேசிஸ் எனப்படும் உடலமைப்பு தயாரிப்பகங்கள், மாநில போக்குவரத்துக்கழகங்கள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் என தனியார் துறையிலும், அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெறலாம்.

வாகன டிசைனிங் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் டிசைனிங் மற்றும் படைப்பாற்றல் திறன் உள்ள ஆட்டோமொபைல் என்ஜினீயர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சாப்ட்வேர், டிசைனிங் என பல்துறை பொறியியல் அறிவை ஒருங்கே பெற்றிருப்பதால் அவர்கள் எளிதாக வேலைவாய்ப்பை பெற முடியும். ஆட்டோமொபைல் படிப்பின் அடிப்படையாக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இருப்பதால் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது சிறப்பு அம்சம்.

* எதிர்காலம் இருக்குமா?

தற்போது ஆட்டோமொபைல் துறையானது வேகமாக வளர்ந்துகொண்டிருப்பதால் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஏற்கனவே சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களும், டி.வி.எஸ்., ராயல் என்பீல்ட், யமஹா, மஹேந்திரா போன்ற இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இன்னும் பல புதிய நிறுவனங்களும் வரவுள்ளன. இத்தகைய சூழலில் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு பிரச்சினையாக இருக்காது.

சாதாரணமாக பி.இ. அல்லது பி.டெக் ஆட்டோமொபைல் பட்டதாரிகள் ஆரம்ப நிலையில் ரூ.30 ஆயிரம் அளவுக்கு ஊதியம் பெறலாம். முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பணியில் சேர்ந்த ஒருசில ஆண்டுகளிலேயே ஊதியம் லட்சத்தை எட்டிவிடும் என்கிறார்கள் இத்துறையின் வல்லுநர்கள்.

* உயர்கல்வி படிக்கலாமா?

ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. அவர்கள் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் பிரிவில் மட்டுமின்றி அதுதொடர்பான ஆட்டோமோட்டிவ் டிசைன், ஆட்டோமோட்டிவ் எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் கண்ட்ரோல் பவர் சிஸ்டம், எமிசன் கண்ட்ரோல் சிஸ்டம், தெர்மோடைனமிக்ஸ், ஏரோடைனமிக்ஸ், ஆல்டர்நேட்டிவ் பியூல்ஸ்... என வெவ்வேறு பிரிவுகளில் எம்.இ., எம்.டெக் படிக்கலாம். வெளிநாடுகளிலும் மேற்படிப்பை தொடரலாம்.

தற்போது ஆட்டோமொபைல் துறையானது வேகமாக வளர்ந்துகொண்டிருப்பதால் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.


Next Story