துருப்பிடிக்காத கார்


துருப்பிடிக்காத கார்
x

உப்புக் காற்று வீசும் பகுதியில் உள்ள கார்கள் விரைவிலேயே துருப்பிடிக்க ஆரம்பித்துவிடுகின்றன. வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் இரும்புத் தகடுகளில் துத்தநாக மேற்பூச்சு பயன்படுத்துகிறார்கள்.

கார் வைத்திருப்பவர்கள் பலருக்கும் தெரியும், ஒவ்வொரு முறை சர்வீசுக்கு விடும்போதும், காரின் அடிப்பகுதியில் ரப்பர் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பர். இவை எல்லாமே ஓரளவு தீர்வு தருமே தவிர நிரந்தர தீர்வாக இருக்கவில்லை. கடலோரப் பகுதியில் உப்புக் காற்று வீசும் பகுதியில் உள்ள கார்கள் விரைவிலேயே துருப்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றன. ஆனால் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு 12 ஆண்டு வரை துருப்பிடிக்காமல் இருக்க உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் செயல்படும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் கார்களுக்கு இதே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆனால் இங்குள்ள கார்களுக்கு அவை அளிக்கப்படுவதில்லை. வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் இரும்புத் தகடுகளில் துத்தநாக மேற்பூச்சு (கேல்வனைஸ்டு ஸ்டீல்) பயன்படுத்துகிறார்கள். இதேபோல இங்குள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்களுக்கு மட்டும் கேல்வனைஸ்டு ஸ்டீலைப் பயன்படுத்துகிறார்கள். உலகிலேயே அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

சாதாரண ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படும் கார் வைத்திருக்கும் உரிமையாளர் கார் வாங்கும் போது டெப்லான் கோட்டிங் என்பதற்காக ரூ.7 ஆயிரமும், அடுத்த 6 ஆண்டுகளில் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை செலவிடுகிறார். அதே கேல்வனைஸ்டு ஸ்டீல் காராக இருந்தால் கூடுதலாக அவர் ஒரே சமயத்தில் செலவிடும் தொகை ரூ.9 ஆயிரம். 6 ஆண்டுக்குப் பிறகு ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் ரூ.10 ஆயிரம் செலவிட்டால் போதும்.

எனவே இதை பயன்படுத்த இந்திய தரச்சான்று மையம் (பி.ஐ.எஸ்.) முன்வர வேண்டும் என மும்பை ஐ.ஐ.டி.யின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கேல்வனைஸ்டு ஸ்டீல் உபயோகத்தை கட்டாயமாக்கினால் மட்டுமே ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதை பின்பற்றும் என குறிப்பிட்டுள்ளது. கேல்வனைஸ்டு ஸ்டீல் உபயோகம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்தால் மட்டுமே இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கும் துருப்பிடிக்காத கார்களை ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தயாரிக்கும். இரும்புத் தகடுகளை அதன் உயர்ந்தபட்ச வெப்பத்தில் திரவ துத்தநாகத்தில் மூழ்கடித்து எடுக்கப்படுவதே கேல்வனைஸ்டு ஸ்டீல் எனப்படுகிறது. இது இரும்பின் மீது மேல்பூச்சாக இருப்பதால் துருப்பிடிக்காத தன்மை கொண்டதாக விளங்குகிறது. இரும்புத் தகட்டின் மீது மேற்பூச்சு பூசப்படுவதால் இரும்பின் இயல்பு குணம் எதுவும் மாறாது. அதாவது உறுதித் தன்மை, காந்தத்தால் கவரப்படும் தன்மை என எதுவுமே மாறாது.


Next Story