12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் 4500 வேலைவாய்ப்புகள்
குரூப்-சி காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய ஆட்களை தேர்ந்து எடுக்கும் பணியை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்துகிறது. தற்போது குரூப்-சி பணிக்காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி தகுதியிலான (Combined Higher Secondary Level Examination) தேர்வுக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணிக்காலியிடங்களின் எண்ணிக்கை சுமார் 4500 ஆகும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள எழுத்தர் (Lower Division Clerk), இளநிலை தலைமைச் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) போன்ற பணிக்காலியிடங்கள் இதில் அடங்கும்.
வயது வரம்பு
1-1-2022 தேதியின்படி வயது வரம்பு 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். 1-1-2004 க்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உச்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இணையதளத்தின் வாயிலாகவே அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும். இணையதள முகவரி: http://ssc.nic.in.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 4.1.2023.
கடைசி தேதி வரை காத்திருக்காமல் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்கும் போது சிரமம் ஏற்படும்.
சான்றிதழ்
இதர பிற்பட்ட வகுப்பினர் (O.B.C) பிரிவிற்குள் வரும் B.C மற்றும் M.B.C. மனுதாரர்கள் அதற்கான சான்றிதழ்களை தனியாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே BC/MBC சான்றிதழ்கள் வைத்திருப்பீர்கள். O.B.C என தனியாக சான்றிதழ் பெறவேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, முற்பட்ட வகுப்பை (Forward Community) சார்ந்த மனுதாரர்கள் Economically Weaker Section என்பதற்கான சான்றிதழை தனியாக வாங்கி வைத்துக் கொள்ளவும். இதுவரை O.B.C/E.W.S சான்றிதழை வாங்காதவர்கள் 4.1.2023-க்கு முன்பு வாங்கி விடுங்கள்.
விண்ணப்பிக்கும்போது எந்தவொரு சான்றிதழையும் அப்லோடு செய்யத் தேவையில்லை. சான்றிதழ்கள் சரிபார்ப்பின்போது சமர்ப்பித்தால் போதும்.
புகைப்படம்
பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ மூன்று மாதத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது, 6.9.2022-க்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தவும். கண்ணாடி (Spectacles) போட்டுக் கொண்டோ அல்லது தொப்பி (Cap) அணிந்து கொண்டோ புகைப்படம் எடுக்கக்கூடாது. போட்டோ தெளிவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி/எஸ். டி வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஓ.பி.சி, ஓ.சி. (O.C.-EWS) வகுப்பைச் சார்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பக் கட்டணமாக நூறு ரூபாய் மட்டும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வுத் திட்டம்
முதல் கட்டத் தேர்வு (Tier 1), இரண்டாம் கட்டத் தேர்வு (Tier 2) என இரண்டு கட்டங்களில் தேர்வு நடைபெறும். இத்தேர்வு கணினி வழி (Computer Based Exam) நடைபெறும்.
வினாக்கள் கொள்குறி வகையினதாக (Objective Type) வினாக்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
நெகட்டிவ் மதிப்பெண் முறை (Negative Marking) பின்பற்றப்படுகிறது. அதாவது நீங்கள் தவறாக விடையளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் 0.5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், இரண்டாம் நிலைத் தேர்வுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இறுதி கட்ட செலக்சனுக்கு முதல்நிலைத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
முதல்கட்டத் தேர்வில் கீழ்க்கண்ட பகுதிகள் இடம்பெறும். தேர்வு நேரம் 60 நிமிடங்கள் (ஒரு மணி நேரம்)
Tier I
Subject No. of Qs Max Mark
General Intelligence and 25 50Reasoning
General Awareness 25 50
Quantitative Aptitude 25 50
English Comprehension 25 50
இரண்டாம் கட்டத் தேர்வு
இத்தேர்வும் கொள்குறி வகையில்தான் இருக்கும். இதிலும் நெகட்டிவ் மதிப்பெண் முறை (Negative Marking) இருக்கும். நீங்கள் தவறாக விடையளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
இரண்டாம் கட்டத் தேர்விலும் கணிதம், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் புத்திக் கூர்மை ஆகிய பகுதிகள் இடம்பெறும். இது முதலாம் அமர்வு (Session-1) மற்றும் இரண்டாம் அமர்வு (Session-2) என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் அமர்வின் முதல் பகுதியில் (Section 1) கணிதம் மற்றும் ரீசனிங் பகுதியில் 60 வினாக்கள் இடம்பெறும். மொத்த மதிப்பெண்கள் 180.
இரண்டாம் பகுதியில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய பகுதிகளிலிருந்து 60 வினாக்கள் இடம்பெறும். இவற்றிற்கான மதிப்பெண்கள் 180.
அடுத்ததாக section-3 பகுதியில் கணினி அறிவு தொடர்பாக 15 வினாக்கள் இடம்பெறும். இவற்றிற்கான மதிப்பெண்கள் 45.
இரண்டாம் அமர்வில் (session 2) டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு கணினியில் தட்டச்சு செய்யும் தேர்வு (Data Entry Speed Test) நடைபெறும். இதற்கான கால அளவு 15 நிமிடங்கள். இதர பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தட்டச்சு செய்யும் தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 10 நிமிடங்கள். இது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே.