நினைவுகளை மீட்டெடுக்கும் 'ஸ்பெஷல்' படைப்புகள்


நினைவுகளை மீட்டெடுக்கும் ஸ்பெஷல் படைப்புகள்
x

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர் எம்.பி.ஏ. பட்டதாரி சாந்தி பிரியா.தாய்ப்பால் என்று எடுத்துக்கொண்டால், கேட்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பலவிதமான நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களை உருவாக்கி கொடுத்து இருக்கிறார்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் 'ஸ்பெஷலான' தருணங்கள் உண்டு. அதை இன்னும் ஸ்பெஷலாக்கி கொடுக்கிறார், சாந்தி பிரியா. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. எல்லோரும் வாழ்க்கையை ஒரே கோணத்தில் பார்த்து கொண்டிருக்க, இவர் அதே வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்த்து ரசித்திருக்கிறார். அதனால்தான், எம்.பி.ஏ. படிப்பை ஓரங்கட்டிவிட்டு, தன்னுடைய வாழ்க்கையையும், மற்றவர்களுடைய வாழ்க்கையையும் மிகவும் ஸ்பெஷலாக்கி இருக்கிறார்.

அப்படி இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்...!

* உங்களுடைய 'ஸ்பெஷல்' என்ன?

மற்றவர்களின் ஸ்பெஷலான தருணங்களை, எப்படி ஸ்பெஷலாக்குவது என்பதில்தான் என்னுடைய ஸ்பெஷல் அடங்கி இருக்கிறது. அதாவது, காதல் புரோபோசல் பரிசு, திருமண நாள் பரிசு, குழந்தை பிறப்பு, தாய்மையின் அடையாளங்கள்... இப்படி மற்றவர்களின் வாழ்க்கையில் ரொம்பவும் ஸ்பெஷலான தருணங்களில், பரிமாறப்படும் பொருட்களை அல்லது அந்த தருணத்தை நினைவூட்டும் பொருட்களை, அவர்கள் விரும்பும் வகையில் நகையாகவோ, நினைவு சின்னங்களாகவோ, பரிசுப்பொருட்களாகவோ மாற்றிக்கொடுப்பதுதான், என்னுடைய ஸ்பெஷல். அதிலும், தாய்ப்பாலில் பலவிதமான கலைப்பொருட்களை செய்து அசத்தியிருக்கிறேன்.

* எப்படி தொடங்கியது இந்த பயணம்?

எனக்கு சிறுவயது முதலே, கலை வேலைப்பாடுகளில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, நகை வடிவமைப்பை மிகவும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டேன். இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டு பெண் ஒருவர், தாய்ப்பாலில் நினைவு பொருட்கள் செய்யும் கட்டுரையை படித்தபோது ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் ஏன் முயன்று பார்க்கக்கூடாது என்ற யோசனையில், என்னுடைய பாட்டி வளர்த்த மாட்டின் பாலை பதப்படுத்தி, அதிலிருந்து விதவிதமான நகைகளை செய்து பழகினேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள், எந்தவித பயிற்சியும் இல்லாமல் நானே சுயமாகவே கற்றுக்கொண்டேன்.

* இப்போது என்னவெல்லாம் உருவாக்குகிறீர்கள்?

தாய்ப்பால் என்று எடுத்துக்கொண்டால், கேட்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பலவிதமான நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களை உருவாக்கி கொடுக்கிறேன். அதாவது பிரேஸ்லெட், கம்மல், செயின், மோதிரம், பெண்டெண்ட், லாக்கெட்... இப்படி நிறைய பொருட்களை செய்திருக்கிறேன். தாய்ப்பால் மட்டுமின்றி, பிறந்த குழந்தையின் முதல் முடி, தொப்புள் கொடி, குழந்தையின் பாத உருவம், குழந்தை கருவாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்கேன் புகைப்படம், குழந்தைப் பருவத்தில் விழுந்த பற்கள்... இப்படி குழந்தை சம்பந்தப்பட்ட பல நினைவுப்பொருட்களையும், நினைவுப்படுத்தக்கூடிய நகைகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்.

கூடவே, திருமண மாலை, தாலி, கல்யாண மோதிரம், கர்ப்பத்தை உறுதி செய்ய பயன்படுத்திய பிரெக்னென்ஸி கிட்... இவற்றை கொண்டும் பல ஸ்பெஷலான நினைவுப்பரிசுகளை உருவாக்கி இருக்கிறேன். மேலும் பிறந்த குழந்தையை முதலில் கிடத்திய துண்டு, குழந்தைக்கு முதன்முதலில் அணிவித்த உடை... இவற்றை கொண்டு புதுமையான பொம்மைகளையும் உருவாக்கி கொடுத்திருக்கிறேன்.

* வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?

இது ஒரு படைப்புக் கலை. இதில் எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. அதேபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் ஸ்பெஷலாக தோன்றும். அதை, என்னிடம் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய வகையில், அதை நகையாகவோ, நினைவுப்பொருட்களாகவோ செய்ய சொல்வார்கள். ஒருசிலர், நினைவு பொருட்களை, பிளாஸ்டிக் மற்றும் சிலிக்கான் தவிர்த்து தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களிலும் செய்ய சொல்வார்கள்.

அந்தவகையில், காதல் ஜோடிகள் ரொம்பவே விநோதமான காதல் பரிசுகளை செய்ய சொல்வார்கள். பல வருடங்களுக்கு முன்பு காதலை வெளிப்படுத்தியபோது பரிசாக கொடுத்த ரோஜா பூவில் (காய்ந்த நிலையில் இருக்கும்) நினைவு பொருட்களை செய்ய சொல்வார்கள். வெகு தூரத்தில் பிரிந்து வாழ்ந்தவர்கள், பிரிவு சமயங்களில் சிந்திய கண்ணீரை பத்திரப்படுத்தி நகை மற்றும் நினைவு பரிசுகளை செய்ய சொல்வார்கள். இவர்கள் மட்டுமின்றி, தங்களது நெருங்கிய உறவுகளின் இழப்புகளால் வாடுபவர்களும், அவர்களது நினைவாக பலவிதமான நினைவு பொருட்களை செய்ய சொல்வார்கள்.

* நகைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் செய்ய எவ்வளவு காலமாகும்?

தாய்ப்பாலில் நகை மற்றும் நினைவுப்பொருட்கள் செய்வது என்றால், கிட்டத்தட்ட 4 வாரங்கள் ஆகும். ஏனெனில், தாய்ப்பாலை பதப்படுத்தவே 3 வாரங்கள் ஆகிவிடும். அதற்கு பிறகுதான், அதை பயன்படுத்தி நகை மற்றும் நினைவுப்பொருட்களை உருவாக்க முடியும். மற்றவற்றை பயன்படுத்தி பரிசுப்பொருட்கள் செய்ய, ஒரு வாரம் தேவைப்படும்.

* பலரது ஸ்பெஷல் தருணங்களை ஸ்பெஷலாக்கி வருகிறீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?

தினந்தோறும் புதுப்புது நபர்களின் ஸ்பெஷலான தருணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ஏற்ற புதுமையான படைப்புகள் செய்வது, ரொம்பவே ஸ்பெஷலான அனுபவம். மற்றவர்கள், அந்த ஸ்பெஷலான தருணங்களை என்னிடம் விவரிக்கும்போது, ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களின் அந்த ஸ்பெஷலான தருணத்தில் நானும் பங்கெடுத்துக் கொண்டதாக மகிழ்வேன். அதேபோல, நான் செய்து கொடுக்கும் பரிசை அவர்கள் வாங்கி மகிழும்போது, அந்த சந்தோஷம் இரு மடங்காகிவிடும். தினமும், எங்கோ ஒரு மூலையில் இருந்து, எனக்கு நன்றிகளும், பாராட்டுகளும் வந்து கொண்டே இருக்கும்.

* ஸ்பெஷல் கிப்ட் கலாசாரம் நகர்ப்புறங்களை தாண்டி, கிராமங்களிலும் பரவி இருக்கிறதா?

கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி, எல்லோருமே தங்களுடைய ஸ்பெஷல் தருணங்களை பொக்கிஷங்களாக பாதுகாக்க ஆசைப்படுகிறார்கள். முன்பெல்லாம், திருமண நினைவுகளை போட்டோ-வீடியோ ஆல்பம் மட்டுமே நினைவூட்டின. ஆனால் இன்று அப்படியில்லை. அந்த நினைவுகளை தாங்கிய நிறைய ஸ்பெஷலான பரிசுகள், மோதிரமாக, செயினாக, லாக்கெட்டாக அவர்களோடு பயணிக்கின்றன.

தாய்ப்பாலில் நகை மற்றும் நினைவுப்பொருட்கள் செய்வது தவறான முன்னுதாரணமாக மாறுமா?

இல்லை. வெறும் 5 மி.லி. அளவில்தான், தாய்ப்பால் சேகரிக்கிறோம். அதுவும் குழந்தைக்கு தேவைப்படாத பட்சத்தில், மிச்சமாக இருப்பதில்தான் சேகரிக்கிறோம். வெறும் 5 மி.லி. தாய்ப்பாலில், நினைவுப்பொருட்களும், நகைகளும் செய்வது தவறில்லை என நான் நினைக்கிறேன்.


Next Story