மழைக்காலத்தில் செடிகளை பராமரிக்க எளிய குறிப்புகள்


மழைக்காலத்தில் செடிகளை பராமரிக்க எளிய குறிப்புகள்
x

மழைக்காலம் செடிகள் வளர்ப்புக்கு உகந்த காலமாகும். எனினும் செடிகளை முறையாக பராமரிக்காவிட்டால் அழுகி போய்விடும். எளிதில் பூச்சி தாக்குதலுக்கு இலக்காகிவிடும்.

மழைக்காலத்தில் செடிகள் செழிப்புடன் வளர்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் பற்றி பார்ப்போம்.

* மழைக்காலத்தில் செடிகளின் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் தேங்கி நிற்கும். அப்படி பூந்தொட்டியில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனே வெளியேற்றிவிட வேண்டும்.

* தொட்டியின் அடிப்பகுதியில் இருக்கும் வடிகால் துளைகளை சரி பார்க்க வேண்டும். தண்ணீர் வெளியேற முடியாத அளவுக்கு ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை உடனே சீர்படுத்த வேண்டும். சில சமயங்களில் மண்ணின் தன்மையை பொறுத்து தண்ணீர் வடிவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட சூழலில் செடியை வேறொரு தொட்டிக்கு மாற்றிவிடுவதுதான் நல்லது.

* மழை காலங்களில் செடி வளர்க்கும்போது பூந்தொட்டிக்குள் இரண்டு பங்கு மண்ணையும், ஒரு பங்கு மாட்டு சாணத்தையும் நிரப்ப வேண்டும். இதன் மூலம் பூந்தொட்டியின் மேல்பகுதியில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும். அதையும் மீறி தொட்டியில் தண்ணீர் தேங்கி நின்றால் வடிகால் துளை தண்ணீர் வெளியேறுவதற்கு வசதியாக திறந்த நிலையில் இருக்கிறதா? என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். துளைகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் மண் கடினமாகிவிடும். வேர்கள் அழுகுவதற்கு வழிவகுத்துவிடும்.

* மழைக்காலத்தில் பூஞ்சை தாக்குதல்கள் ஏற்படுவது பொதுவானது. அதனை தவிர்க்க 10-15 நாட்களுக்கு ஒருமுறை பூஞ்சைக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டும். வேப்ப எண்ணெய் சிறந்த தேர்வாக அமையும். இயற்கை பூஞ்சைக் கொல்லியாக விளங்கும் இதனை இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.

* மழை காலத்தில் புயல், பலத்த காற்று, சூறாவளி போன்ற பிரச்சினைகளில் இருந்து செடிகளை பாதுகாப்பதற்கு மரக்கிளைகளை கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும்.

* மரக்கன்றுகள், மரக்கிளைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மர துண்டுகள் போன்றவற்றை நடுவதற்கு பருவ மழைக்காலம் ஏற்றது. அவற்றை நடவு செய்த ஒரு வாரத்திற்குள் புதிய இலைகள் தோன்றி துளிர்விட தொடங்கிவிடும். செடிகள் வேகமாகவும் ஆரோக்கியமானதாகவும் வளர்வதற்கு மழைக்காலம் உதவும்.

* அதிக மழைப்பொழிவு மற்றும் குறைந்த சூரிய ஒளி காரணமாக, மழைக்காலத்தில் மண் எப்போதும் ஈரமாக இருக்கும். அதனால் செடிகளுக்கு கூடுதலாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். இது செடிகள் அழுகுவதற்கு வழிவகுக்கும்.

* செடிகள் நடவு செய்யப்பட்டிருக்கும் தரைத்தள பகுதியிலோ, தொட்டிகளிலோ அதிகப்படியான தண்ணீர் நிரம்புவதை தவிர்க்க மண்ணை அடிக்கடி கிளறி விட வேண்டும். பூந்தொட்டியையும் அவ்வப்போது இடம் மாற்றி வைக்க வேண்டும்.

* மழைக்காலத்தில் சூரிய ஒளி செடிகளுக்கு கிடைப்பது கடினம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது செடிகளை சூரிய ஒளி படும் இடங்களுக்கு நகர்த்தி வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் செடியின் இலைகள், தண்டுகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். அவை அழுகும் நிலையில் இருந்தால் உடனே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலைகள் வாடிய நிலையிலோ, அழுகும் நிலையிலோ இருந்தால் அப்புறப்படுத்திவிட வேண்டும்.

* மழைநீர் செடிகளுக்கு நல்லது என்றாலும், அது நேரடியாக பூந்தொட்டி மீது விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் செடிகளை தாங்கி பிடித்திருக்கும் மண் நீரில் கரைந்து செடியை நிலை குலைய செய்துவிடும். மண் அரிப்பு பிரச்சினை ஏற்படும்.

* பூந்தொட்டியின் வடிகால் துளையில் இருந்து வெளியேறும் நீர் தரைத்தளத்தில் பரவாமல் இருக்க பலர் தொட்டியின் அடிப்பகுதியில் அகலமான தட்டுக்களை வைத்திருப்பார்கள். மழைக்காலத்தில் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதில் தண்ணீர் தேங்கினால் கொசுக்கள், பூச்சிகள் இனப்பெருக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.

* நாற்றங்கால் முறையில் செடிகள் வளர்த்து அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் நடவு செய்வதற்கு பருவ மழைக்காலம் சிறந்தது. சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் செடிகளையும் பெரிய தொட்டிகளுக்கு மாற்றலாம். மழைக்காலத்தில் மண் பெரும்பாலும் ஈரமாக இருப்பதால் செடிகளை வேரோடு பிடுங்கி நடவு செய்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.


Next Story