பெண்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்


பெண்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்
x

உலகளவில் 30 சதவீத பெண்கள் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு எதிரான வன் முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடுகளின் பொது சபை (ஐ.நா) வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியா குடரெஸ் கூறுகையில், "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார்.

உலகளவில் 30 சதவீத பெண்கள் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.

15 முதல் 19 வயதுடைய இளம்பெண்களில் 24 சதவீதம் பேர் நெருங்கிய உறவில் இருக்கும் நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமி கள் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள்.

2021-ம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் (81,100) பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 56 சதவீதம் (45,000) பேர் கணவர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆசியாவில் சுமார் 17,800 பெண்கள் தங்கள் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.

இதற்கு நேர்மாறாக, 2021-ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட ஆண்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வாழ்க்கை துணை அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்களை பொறுத்தவரை குடும்பத்திற்கு வெளியே மற்றவர்களால் கொல்லப்படும் அபாயம் அதிகம் உள்ளது.

இந்தியாவில், 2021-ம் ஆண்டில் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு 49 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் பெண்கள் இறந்ததாக 6,589 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020-ம் ஆண்டை ஒப்பிடும்போது 3.85 சதவீதம் குறைந்துள்ளது.


Next Story