சேமிப்பு பழக்கத்தை வளர்க்க பள்ளி மாணவர்கள் நடத்தும் புதுமை வங்கி
பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வியுடன் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான நடைமுறை கல்வியும் பல பள்ளிகளில் போதிக்கப்படுகிறது. சேமிக்கும் வழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் நேரடி வங்கி அனுபவத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது, கர்நாடகாவில் இயங்கும் ஒரு அரசு பள்ளி.
மாணவர்களே நடத்தும் அந்த வங்கியில் பணம் சேமித்தல், முதலீடு செய்தல், டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் போன்ற நடைமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பெங்களூரு அடுத்த முள்ளூரில் இயங்கும் அரசு பள்ளியில் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 39 வயதாகும் பள்ளி ஆசிரியர் சி.எஸ். சதீஷ் இந்த வங்கியை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
அந்த பள்ளியில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சதீஷ், வங்கியல் பணி பற்றிய அத்தியாவசிய நடைமுறைகளையும், பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்பினார். அதனை மாணவர்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்கு வங்கியை நிர்வகிப்பதுதான் சரியான நடைமுறை என்று முடிவு செய்தவர் பள்ளியிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்.
ஸ்கூல் பேங்க் ஆப் முள்ளூர் (எஸ்.பி.எம்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வங்கியில் மாணவர்கள் சேமித்தல், காசோலை நிரப்புதல், பணத்தை வரவு வைத்தல், பணத்தை திரும்பப் பெறுதல், வட்டி பெறுதல் போன்ற செயல்முறைகளை கற்றுக்கொள்கிறார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் 37 மாணவர்களின் ஒத்துழைப்போடு இந்த வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.''
குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அதே வேளையில் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். பெற்றோர்கள் கொடுத்து அனுப்பும் பணத்தை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு கற்பிப்பதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. எதிர்காலத்தில் இந்த வங்கிப்பணிகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், பணத்தை சிறந்த முறையில் கையாளுவார்கள் என்று நான் நம்புகிறேன்'' என்கிறார், ஆசிரியர் சதீஷ்.
மாணவர்கள் தாங்கள் எவ்வளவு பணம் சேமிக்கிறோம், தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு பணத்தை திரும்ப எடுத்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு பாஸ்புத்தகமும் வழங்கப்படுகிறது. பணம் எடுக்க விரும்பினால் வங்கியில் நடைமுறையில் இருப்பதுபோல் செல்லானை நிரப்பி கொடுத்து பணத்தை எடுக்க வேண்டும். மாணவர்கள் நடத்தும் இந்த வங்கிக்கு, வங்கிகளில் இருப்பது போலவே மேலாளர், கணக்காளர், காசாளர் போன்ற பதவிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு பொறுப்பாளர்களாக மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் லாக்கர் வசதியும் உள்ளது.
"பள்ளிக்கூடம் வந்ததும் அனைத்து மாணவர்களும் தங்கள் பணத்தை டெபாசிட் செய்ய பாஸ் புத்தகத்துடன் வருகிறார்கள். நாங்கள் ஒரு சீட்டை நிரப்ப கொடுப்போம். அதில் பணத்தை நிரப்பி கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் கொடுக்கும் பணம் காசாளர் வித்யாவிடம் ஒப்படைக்கப்படும். அவர் அதை டெபாசிட் செய்வார்"என்கிறார், பள்ளி வங்கியின் மேலாளராக இருக்கும் தன்வி.
மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் வழங்குகிறார்கள். உதாரணமாக, ஒரு மாணவர் 100 ரூபாய் சேமித்தால் அவருக்கு பென்சில் பரிசாக வழங்கப்படும். 200 ரூபாய் சேமித்திருந்தால், போனஸாக பேனா கிடைக்கும்.
300 ரூபாய் சேமித்தால் ஒரு நோட்புக்கை பெறுவார்கள். 500 ரூபாய் சேமித்ததும் 5 சதவீத வட்டி வழங்கப்படும். அவர்களின் சேமிப்பு தொகை ஆயிரம் ரூபாயை கடந்தால் அவர்களின் உண்மையான வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
''இதுநாள் வரை பெற்றோர் கொடுத்தனுப்பிய பணத்தை நொறுக்குத் தீனிகளுக்கு செலவிட்டார்கள். இப்போது வங்கி அனுபவத்தை வழங்குவதோடு, சேமிப்பு மனப்பான்மையையும் எங்கள் பள்ளி வங்கி ஊக்குவித்து வருகிறது" என்கிறார் சதீஷ்.
மாணவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை சுற்றுலா, பள்ளி ஆண்டு விழா, எழுது பொருட்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவிடுகிறார்கள். மாணவி ஸ்ரீஷ்மா கூறுகையில், ''நான் 45 ரூபாயைச் சேமித்துள்ளேன். இன்னும் கூடுதலாக சேமித்து பள்ளியின் வருடாந்திர சுற்றுலா பயணத்திற்கு அந்த பணத்தை பயன்படுத்தப் போகிறேன்'' என்கிறார்.
தன்வியின் தாயார் குலாபி கூறுகையில், ''குழந்தைகள்இடையே பெரிய வித்தியாசத்தை பார்க்கிறேன். வீட்டில் கொடுத்தனுப்பிய பணத்தை முன்பு சாக்லேட்கள், குளிர்பானங்கள் மற்றும் பிற நொறுக்கு தீனிகளுக்கு செல வழித்தனர்.
இப்போது வங்கியில் டெபாசிட் செய்ய பணம் கேட்கிறார்கள். பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். பள்ளி சுற்றுலா பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்கள் தொடர்பான செலவுகளுக்கு இந்த பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்கிறார்.