விடுதலை வீரர்களின் பயிற்சிக் களமாக விளங்கிய 'சங்கரபதி கோட்டை'


விடுதலை வீரர்களின் பயிற்சிக் களமாக விளங்கிய சங்கரபதி கோட்டை
x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் இருக்கிறது சங்கரபதி கோட்டை. காட்டுப்பகுதியில் உள்ள இந்த கோட்டை, 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். அப்போதைய ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு மிகவும் விருப்பமான இடமாக இந்த கோட்டை இருந்துள்ளது.

அக்காலத்தில் தொண்டியைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், மன்னர் சேதுபதிக்கு 200 குதிரைகளை பரிசாகக் கொடுத்தார். அந்த குதிரைகளை பராமரிக்க மன்னர் சேதுபதி, திறமையான ஆட்களைத் தேடினார். அப்போது, சிவகங்கை சமஸ்தானத்தோடு நட்புறவு வைத்திருந்த மைசூரு மன்னர் ஹைதர் அலியிடம், குதிரைகளை பராமரிக்க தகுந்த ஆளைக் கேட்டார். இதையடுத்து ஹைதர் அலி தன்னிடம் தளபதியாக இருந்தவர்களில் ஒருவரான சங்கரபதி என்பவரை அனுப்பிவைத்தார்.

சங்கரபதி தீரம் மிக்க மனிதராகவும், யானை மற்றும் குதிரை படைகளில் அதிக அனுபவம் பெற்றவராகவும் விளங்கியவர். தவிர உருது மற்றும் தமிழ் மொழியை நன்றாக கற்றறிந்தவர். அவர் இந்தக் கோட்டையில் தங்கியிருந்துதான், மன்னர் சேதுபதி கொடுத்த குதிரைகளுக்குப் பயிற்சி அளித்தார். அதன் காரணமாக இந்த இடம் 'சங்கரபதி கோட்டை' என்று அழைக்கப்பட்டது. மேலும் மன்னர் சேதுபதி, தன்னுடைய மகளான வேலுநாச்சியாருக்கு அனைத்து விதமான போர் பயிற்சிகளையும் இந்தகோட்டையில் வைத்துதான் கற்றுத்தந்துள்ளார். சிவகங்கை சமஸ்தான மன்னர் முத்துவடுகநாதருக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து, இந்த சங்கரபதி கோட்டையையும் சீதனமாக வழங்கியுள்ளார்.

மைசூரு மன்னர் ஹைதர் அலி மற்றும் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர் இணைந்து வெள்ளையர்களை தாக்க திட்டமிட்டனர். அந்த சமயத்தில் வேலுநாச்சியார் அரண்மனையில் இருந்த குயிலி என்ற பெண், வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கை அழிக்க முன்வந்தார். அதன்படி தனது உடலில் எண்ெணய்யை தடவிக்கொண்டு வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்து, தன்னையும் அழித்துக் கொண்ட தீரம் மிக்க பெண் அவர்.

அந்தநேரத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக படைவீரர்கள் பல்வேறு போர்ப் பயிற்சிகளைப் பெற்றது இந்த சங்கரபதி கோட்டையில்தான். இந்தக் கோட்டையானது கருப்பட்டி, கடுக்காய், சுண்ணாம்பு போன்றவற்றை பயன்படுத்தி பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. தூண்கள் ஒவ்வொன்றும் மிக நுட்பமாகவும், கலைநயத்துடனும், உறுதியுடனும் கட்டப்பட்டுள்ளன.

இந்தகோட்டையின் தூண்கள், தலைமுறைகள் பல கடந்தபின்னும் இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன.

இந்தக் கோட்டையில் இருந்து காளையார் கோவில், சொர்ணகாளீசுவரர் கோவில், திருமயம் கோட்டை ஆகிய இடங்களுக்கு சுரங்கப்பாதை இருந்ததாகவும் கூறுகிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோட்டையின் முகப்பை வெள்ளையர்கள் பீரங்கியால் தகர்த்துவிட்டார்கள். அந்தக் கோட்டை தற்போது பராமரிப்பு இன்றி, முட்புதர்கள் சூழ்ந்தநிலையில் காணப்படுகிறது.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, சட்டசபையில் 110-வது விதியின் கீழ் சங்கரபதி கோட்டை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை என்பது வேதனைக்குரியது. வரலாற்றினைக் கூறும் சங்கரபதி கோட்டை என்னும் பொக்கிஷத்தை வருங்கால சந்ததியினரும் அறியும் வகையில், முறையாக பராமரித்து சுற்றுலாத்தலமாக மாற்றவேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் விடுக்கும் கோரிக்கையாகும்.


Next Story