வீட்டுக்கடனுக்கு வேட்டு வைக்கும் ரெப்போ வட்டி உயர்வு
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் வைப்புத்தொகையை, தங்களது வங்கியின் இதர வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களாக வழங்குகிறது. ஆனால் கடன் வழங்குவதற்கு இந்த வைப்பு தொகை நிதி மட்டும் போதாது.
ரெப்போ ரேட்-பேங்க் ரேட்
எனவே வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் குறுகிய கால கடன் மற்றும் நீண்ட காலக் கடன்களை பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை வங்கிகளுக்கு விதிக்கிறது. அதில் குறுகிய காலக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே, ரெப்போ ரேட் ஆகும்.
அதே போல் நீண்ட காலக்கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதம், பேங்க் ரேட் எனப்படும். அதில் ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை உயர்த்தும் போது வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து வாங்கி இருந்த அனைத்து விதமான கடன்களுக்கும் வட்டி உடனடியாக அதிகரிக்கப்படும்.
எனவே ரெப்போ வட்டி உயர்வு என்பது, வங்கியில் இருந்து கடன் பெற்ற அனைத்து தரப்பு மக்களையும் பெருமளவில் பாதிப்படைய செய்யும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் வீங்கும் என்பார்களே, அதுபோல தான் இதுவும்.
வீ்ட்டுக்கடன்
இந்த ரெப்போ வட்டி உயர்வால், மிகப்பெரிய பாதிப்பை சந்திப்பது வீட்டுக்கடன் வாங்கியவர்கள்தான். ஏனென்றால் தனிநபர் கடன், தொழில்கடன் போன்ற இதர கடன் வாங்கியவர்கள் உயர்த்தப்பட்ட வட்டி தொகையை சேர்த்து மாத தவணையை கட்டி விடுவார்கள். ஆனால் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு நிலைமை அப்படி இல்லை. வீட்டுக்கடன் என்பது நீண்ட காலம் செலுத்தக்கூடியது.
எனவே வங்கிகள் கூடுதல் வட்டி தொகையை மாத தவணையுடன் சேர்த்து வசூலிக்காது. வீட்டுக்கடன் நிர்ணயித்த காலத்தில் முடிவடைந்த பின்தான், இந்த கூடுதல் வட்டி தொகையை மீண்டும் வசூல் செய்வார்கள். அதனால் இன்னும் கூடுதல் காலத்திற்கு மாதத்தவணை செலுத்த நேரிடும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
உதாரணமாக கடந்த 2020-ம் ஆண்டுமே மாதம் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் வெறும் 4 சதவீதம் மட்டுமே. எனவே அப்போது வங்கிகள் வீட்டுக்கடனுக்கு விதித்த வட்டி விகிதம் 6.30 சதவீதம் ஆகும். அந்த சமயத்தில் ஒருவர் வீடு வாங்குவதற்குரூ.30 லட்சத்திற்கு 20 ஆண்டுகள் செலுத்தும்படி வீட்டுக்கடன் வாங்கி இருந்தால் அவர் செலுத்த வேண்டிய மாத தவணை தொகை ரூ.22 ஆயிரத்து 15 மட்டுமே.
இப்போது ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதம் ஆகும். எனவே வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை இப்போது 8.30 சதவீதமாக உயர்த்தி விட்டது. இந்த சமயத்தில் ஒருவர் வீடு வாங்குவதற்கு ரூ.30 லட்சத்திற்கு 20 ஆண்டுகள் செலுத்தும் வகையில் வீட்டு கடன் வாங்கினால் அவர் செலுத்த வேண்டிய மாத தவணைரூ.26 ஆயிரத்து 35 ஆகும்.
கூடுதல் ஆண்டுகள்
அதாவது கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022-ம் ஆண்டு வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மாத தவணைத்தொகை கூடுதலாக ரூ.4 ஆயிரத்து 20 ஆக அதிகரித்து விடுகிறது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கடன் வாங்கியவர்கள், 2 ஆண்டுகள் கடன் தொகை செலுத்திய நிலையில் மீதமுள்ள18 ஆண்டுகளுக்கு கூடுதலாக தற்போது உயர்த்தப்பட்ட இந்த வட்டி தொகையை செலுத்தி ஆக வேண்டும். ஆனால் வங்கிகள் வீட்டுக்கடனுக்கான மாதத்தவணை தொகையை அதிகரிப்பது இல்லை.
மாறாக கடன் பெற்ற போது இருந்த அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மாத தவணையை மட்டுமே வசூலிக்கின்றனர். கூடுதலாக உயர்ந்த இந்த தொகையை, ஏற்கனவே திட்டமிட்டு இருந்த கால அளவுக்கு பின் வசூல் செய்ய தொடங்குகின்றனர். அதன்படி அவர்களது கடன் ஏற்கனவே திட்டமிட்டப்படி 20 ஆண்டுகளில் முடியாமல் கூடுதல் ஆண்டுகள் செலுத்த வேண்டும்.
தோராய கணக்கு
அதில் எத்தனை ஆண்டுகள் கூடுதலாக மாதத்தவணை செலுத்த வேண்டும் என்பதற்கு பதில் தேடினால், அது வீட்டு கடன் வாங்கியவர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி விடும். உதாரணமாக 2020-ம் ஆண்டு ஒருவர் 20 ஆண்டுகளுக்கு வீட்டு கடன் வாங்கி இருந்தால், தற்போதைய ரெப்போ வட்டி உயர்வால் அவர் கூடுதலாக 11 ஆண்டுகள் என மொத்தம் 31 ஆண்டுகள் மாதத்தவணை செலுத்த வேண்டும். இதுவே 25 ஆண்டு கால கடன் என்றால் 15 ஆண்டுகள் வரை அதிகரித்து 40 ஆண்டுகளும், 30 ஆண்டு கால வீட்டு கடன் என்றால் 17 ஆண்டுகள் அதிகரித்து 47 ஆண்டுகள் கூடுதலாக மாதத்தவணையை செலுத்த வேண்டுமாம். இது ஒரு தோராய கணக்குதான். வங்கிகளுக்கு வங்கி, இது மாறுபடும். இன்னும் வட்டி விகிதம் அதிகரித்தால் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும் என்பதே பொருளாதார ஆலோசகர்களின் தகவலாக இருக்கிறது.
லாபமும், நஷ்டமும் யாருக்கு?
இந்தியாவில் கடந்த காலங்களில் ரெப்போ வட்டி வகிதம் எப்போதும் அதிகமாகவே இருந்தது. உதாரணமாக 2000-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரெப்போ வட்டி 16 சதவீதம் இருந்தது. அப்போது வீட்டு கடனுக்கான வட்டி 18 சதவீதம் வரை சென்றது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைந்தபட்சம் 4.75 சதவீதம், அதிகபட்சமாக 9 சதவீதம் வரை இருந்தது. அதில் இந்த குறைந்தபட்ச 4.75 என்ற அளவு ஓரிரு மாதம் மட்டுமே நீடித்தது. சராசரியாக அவரது ஆட்சியில் 7.50 சதவீதம் வரை ரெப்போ வட்டி இருந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமரான பின் தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் குறைந்து கொண்டே வந்தது. அவர் பொறுப்பேற்ற போது 8 சதவீதம் இருந்த ரெப்போ வட்டி, படிப்படியாக குறைக்கப்பட்டு 2020-ம் ஆண்டு 4 சதவீதம் அளவுக்கு சென்றது. இதுதான் மிக குறைந்த அளவான ரெப்போ வட்டி விகிதம் ஆகும். மோடி ஆட்சியில் சராசரியாக கடந்த 8 ஆண்டுகளில் 5.5 சதவீதம் அளவுக்கே ரெப்போ வட்டி இருக்கிறது. எனவே தான் வீட்டுக்கடன் உள்பட அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் மோடி ஆட்சியில் மிக குறைவாக இருந்தது. அதே நேரத்தில் அவரது ஆட்சியில் தான் வைப்பு தொகைக்கான வட்டியும் மிக குறைவாகவே உள்ளது. அதற்கும் ரெப்போ வட்டி தான் காரணம். ஏனென்றால் ரெப்போ வட்டி குறைந்தால் கடன்களுக்கான வட்டி மட்டுமல்ல, வாடிக்கையாளர்களின் வைப்பு தொகைக்கும் வட்டியை வங்கிகள் குறைத்து விடுகின்றன. இந்த கணக்கீட்டின்படி ரெப்போ வட்டி குறைந்தால் கடன் வாங்குபவர்களுக்கு லாபம். வைப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கு நஷ்டம். அதுவே ரெப்போ வட்டி உயர்ந்தால் வைப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கு லாபம். கடன் வாங்கியவர்களுக்கு கஷ்டம்.
வீட்டுக்கடன் வட்டியில் இருந்து தப்பிக்கலாம்
வீட்டுக்கடனை பொறுத்தவரை மற்ற கடன்களை விட வட்டி விகிதம் மிக குறைவாகவே இருக்கும். ஆனாலும் திரும்ப செலுத்தும் ஆண்டுகள் அதிகம் என்பதால் அதிக வட்டியை நாம் வங்கிக்கு கொடுக்க வேண்டும். ஒருவர் ரூ.30 லட்சத்தை 20 ஆண்டுக்கு செலுத்தும்படி கடன் வாங்கி இருந்தால் அவர் தற்போதைய நிலையில் வட்டியுடன் சேர்த்து ரூ.62 லட்சம் செலுத்த வேண்டும். அதாவது வங்கிக்கு ரூ.32 லட்சத்தை வட்டியாக மட்டும் செலுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகளை நிதித்துறையினர் தெரிவிக்கின்றனர். அதில் மிக முக்கியமானது மியூட்சுவல் பண்ட் திட்டத்தில் உள்ள எஸ்.ஐ.பி. (SIP) முதலீடு.
அதாவது வீட்டு கடன் வாங்குபவர்கள் தாங்கள் செலுத்தும் வீட்டு கடன் மாதத்தவணை தொகையை மையமாக வைத்து அதில் குறைந்தது 10 சதவீதம் தொகையை எஸ்.ஐ.பி. திட்டத்தில் சேமிக்க வேண்டும். அதாவது ஒருவர் ரூ.20 ஆயிரம் வீட்டு கடன் மாத தவணை செலுத்துகிறார் என்றால், அவர் மாதம் தோறும் ரூ.2 ஆயிரத்தை எஸ்.ஐ.பி. திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த முதலீட்டில் 12 சதவீத வட்டியில் இருந்து அதிகபட்சமாக 18 சதவீத வட்டி வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடும் ஆகும். இப்படி சேமித்து வைத்தால், நாம் வங்கிக்கு செலுத்தும் வட்டி தொகையை 20 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.பி. முதலீடு மூலம் நமக்கு திரும்ப கிடைத்து விடும். அதன்மூலம் வீட்டுக்கடனுக்கு நாம் வங்கிக்கு செலுத்திய வட்டியை நேர் செய்து விடலாம். எஸ்.ஐ.பி. திட்டம், ஆபத்து இல்லாததால் பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.