பிரிட்ஜ் பராமரிப்பும், பாதுகாப்பும்
இன்றைய காலகட்டத்தில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களின் வரிசையில் பிரிட்ஜ் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகின்றது.
ஒருமுறை வாங்கினால் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கும் மேல் நம்முடன் பயணிக்கக்கூடிய ஃபிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும். சரி அவற்றை எப்படிப் பாதுகாத்து பராமரிப்பது? உங்களுக்காகவே இதோ சில யோசனைகள்.
ப்ரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இல்லாமல் சற்று தள்ளிவைக்க வேண்டும். அந்த கம்பி வலைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். அந்தக் கம்பி வலை களில் படியும் ஒட்டடையை சிறிய ப்ரஷ்ஷின் மூலம் அகற்றலாம்.
வெளியூர் செல்லும் பொழுது ப்ரிட்ஜ்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. ப்ரிட்ஜை ஆஃப் செய்த பிறகு அதை நன்கு துடைத்து காய வைத்து பின்பு அவற்றை மூடி வைத்து விட்டு செல்லலாம்.. ஈரம் காயாமல் மூடி வைக்கும் பொழுது ப்ரிட்ஜ்ஜிற்குள் பூஞ்சைக் காளான் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
ப்ரீஸரில் நாள்பட வைத்திருக்கும் எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் வெளியில் எடுத்து விட முடியாது. எனவே ஃப்ரீஸரில் சிறிது கல் உப்பைத் தூவி அவற்றின்மீது பாத்திரங்களை வைத்தோமானால் அவற்றை வெளியில் எடுப்பது எளிது..ஃப்ரீஸரில் இருக்கும் பொருட்களை வெளியில் எடுக்க முடியவில்லை என்றால் கத்தி, கரண்டி போன்ற கூரான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது..மேற்கூறிய யோசனையைப் பின்பற்றினால் ஃப்ரீஸரிலிருந்து பொருட்களை வெளியில் எடுப்பதும் எளிது அதேபோல் ஃப்ரீஸரும் சேதமாவது தவிர்க்கப்படும்.
ப்ரிட்ஜை மிகவும் குறுகிய இடத்தில் வைக்காமல் காற்றோட்டமுள்ள இடத்தில் வைப்பது சிறந்தது.
ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் சோடா உப்பு இவை அனைத்தையும் நன்றாக கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்பிரே செய்து ஐந்து நிமிடங்கள் ஊறிய பின்னர் ஒரு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து எடுத்தோம் என்றால் ஃப்ரிட்ஜில் படிந்திருக்கும் நாள்பட்ட அழுக்கும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.ப்ரிட்ஜ் சுகந்த மணத்துடன் இருக்கும்..
மாதத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜிற்குள் இருக்கும் டிரே, பாக்ஸ் போன்றவற்றை வெளியில் எடுத்து நன்றாக கழுவி காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும்.
ப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரப்பர் பீடிங்கை மென்மையான பிரஷ் கொண்டு மேலே கூறிய ஸ்பிரேயை உபயோகப்படுத்தி சுத்தப்படுத்தலாம்.
ப்ரிட்ஜ்ஜிற்கு தரமான ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பொருத்துவதன் மூலம் மின்சாரம் அளவுக்கு அதிகமாக வரும் நேரங்களில் ஃப்ரிட்ஜ் பழுதடையாமல் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது..
ப்ரிட்ஜை ஒரு தடவை ஆஃப்செய்து விட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ப்ரிட்ஜ் இயங்குவதற்கு அதனுள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும்.
இன்றளவும் சிறிய வகை பிரிட்ஜ்களில் ஃப்ரீஸரில் டீஃப்ராஸ்ட் பட்டன் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கமுடியும்.. 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த பட்டனை பிரஸ் செய்து ஃப்ரீஸரில் உறைந்திருக்கும் அதிகப்படியான ஐஸைக் கரைய வைக்க வேண்டும்.இவ்வாறு டீஃப்ராஸ்ட் செய்வதன்மூலம் . ப்ரிட்ஜ் குறுகிய காலத்தில் பழுதடையாமல் அதிக வருடங்கள் நீடித்து உழைக்கும்.
6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். இதனால் அதிக சூடு ஏற்பட்டு ப்ரிட்ஜ் கடினமாக வேலை செய்வது குறையும்.
ப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும்.எனவே ப்ரிட்ஜ் கேஸ்கட் சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை அடிக்கடி கவனியுங்கள்.. தளர்வாக இருந்தால் பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து அதை சரி செய்து கொள்ளுங்கள்..
ப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.இப்பொழுது வரும் ஃப்ரிட்ஜ்களில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு என்று ஜெல் உள்ளே வைத்து செய்யப்பட்ட பில்டர் போன்ற அமைப்பானது கொடுக்கப்பட்டிருக்கின்றது..
அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது, அவை மின்சாரத்தை அதிக அளவு மிச்சப் படுத்துவதற்கு உதவுகின்றது.
பொதுவாக ப்ரிட்ஜ்ஜுக்குள் எல்லா பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வைத்து உபயோகித்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்..ப்ரிட்ஜ்ஜுக்குள் அதிக நாட்கள் வைத்து உபயோகப்படுத்தப்படும் எந்த ஒரு உணவுப் பொருளும் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம். இல்லையெனில் வாரண்டிக்கு முன்பாகவே அந்தப் பொருட்கள் பழுதாகி நமக்கு அதிகப்படியான செலவை உண்டாக்கிவிடும்.இல்லையென்றால் அவை அதிக மின் கட்டணத்தை உண்டாக்கும்.எனவே முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் எலக்ட்ரானிக் பொருட்களை அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கச் செய்யும் என்பதை நினைவில் கொண்டு அவற்றை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.