சகோதரத்துவத்துக்கு கவுரவம்


சகோதரத்துவத்துக்கு கவுரவம்
x

சகோதர பாசத்தை வெளிக்காட்டும் ரக்‌ஷா பந்தன் நிகழ்வின் அங்கமாக ராக்கி கயிறு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நலனில் அக்கறை காட்டும் உறவுகள், அன்போடு பழகும் நபர்களுக்கு பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்வார்கள்.

ரக்‌ஷா பந்தன் விழா மன மகிழ்ச்சியுடன் விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் ராஜஸ்தானில் ஒரு பெண் தனது சகோதரரின் கையில் ராக்கி கட்டிய சம்பவம், பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துவிட்டது. அந்த பெண் சிலையாக வடிக்கப்பட்டிருக்கும் தனது சகோதரனின் கையில் ராக்கி கட்டி கவுரவிக்கிறார்.

ராணுவ உடையில் துப்பாக்கி ஏந்தியபடி கம்பீரமாக நிற்கும் சகோதரனின் சிலையை பார்த்ததும் பெருமிதம் கொள்ளும் அவரது மனதில் ராக்கி கட்ட தொடங்கியதும் வெறுமை சூழ்ந்து கொள்கிறது. அந்த பெண்ணின் சகோதரர் ஷாஹீத் கன்பத் ராம் கத்வாஸ்ரா, முன்னாள் ராணுவ வீரர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள குதியாலா கிராமத்தை சேர்ந்தவர். ராணுவ வீரராக பணி புரிந்தவர் ஜம்மு காஷ்மீரில் நடந்த மோதலில் 24.9.2017 அன்று வீர மரணம் அடைந்தார். அவர் நினைவாக குதியாலா கிராமத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலைக்கு அவரது சகோதரி ராக்கி கட்டி இருப்பது குறித்து ''வருத்தமும், பெருமையும்'' என்ற தலைப்பில் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ''ஒரு கணம் சகோதரனை இழந்த சோகம், மறுகணம் தேசத்துக்காக உயிர் தியாகம் செய்ததை நினைத்து பெருமை என கலவையான உணர்வுகளை அந்த பெண்ணின் மனம் பிரதிபலிப்பதை உணர முடிகிறது.

சிலையாக நிற்கும் தனது சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்டும்போது அவனிடம் இருந்து எந்த வகையான உணர்வுகளையும் எதிர்பார்க்கமுடியாது என்பது அந்த பெண்ணுக்கு தெரியும். ஆனாலும் அவள் கட்டுகிறாள். இதுதான் சகோதர பாசம். இதுதான் இந்தியா'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல் பலரும் பாராட்டி பதிவிட்டு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். நாட்டைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பலரும் பாராட்டி பதிவிட்டுள்ளார்கள்.


Next Story