ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதும் கலையே!


ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதும் கலையே!
x

ஜல்லிக்கட்டு காளைகளை பராமரித்து வளர்ப்போரின் அனுபவங்கள் சற்று வித்தியாசமானது.

தமிழர்களின் வீர விளையாட்டாகவும், தமிழ் கலாசாரத்தின் அடையாளமாகவும் கருதப்படுவது, ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், ேசலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை பராமரித்து வளர்ப்போரின் அனுபவங்கள் சற்று வித்தியாசமானது.

எடப்பாடியை அடுத்த புதுப்பாளையம் கிராமம், முற்றிலும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஊர். இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோவில் வளாகத்தில், ஆண்டுதோறும் தைப்பொங்கல் அன்று நடைபெறும் 'எருதாட்ட நிகழ்ச்சி' குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த நிகழ்வில் இப்பகுதி விவசாயிகள் அனைவரும் தங்கள் வீட்டில் வளர்க்கும் காளைகளை பங்கேற்கச் செய்வதை பெருமையாகக் கருதுகிறார்கள்.

இந்த பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். என்ற தங்கவேல், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில்தான் பெற்ற அனுபவங்கள் குறித்து கூறியதாவது:-

எங்கள் பண்ணையில் காங்கேயம், மயிலைக்காளை, கரியான்காளை, கூளைகொம்பன், மைசூர் மலைக்காளை உள்ளிட்ட சில வகை காளைகளை வளர்த்து வருகிறோம். இவை பெரும்பாலும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கு கொள்ளக்கூடியவை. ஜல்லிக்கட்டு காளைகளை பொறுத்தளவில், மாட்டின் உடல், நெற்றி சுழி, முதுகு சுழி உள்ளிட்ட அமைப்புகளை கொண்டே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், அதனை தங்கள் குடும்பச் சொத்தாகவும், அது தங்கள் குடும்ப கவுரவத்தின் அடையாளமாகவும் கருதுவார்கள். எங்கள் பண்ணையில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் பங்கு கொண்டு, தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. அப்படி கிடைக்கும் பரிசுகளை மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையத்திற்கு வழங்குவோம்.

எங்கள் குடும்ப உறுப்பினர் போல் பாவித்து வளர்க்கும் காளைகளின் வயிறு நிறைந்தால்தான், எங்களின் மனது நிறையும். அதனால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு புண்ணாக்கு, தேங்காய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை நாங்கள் அதிகம் வழங்குவது இல்லை. காரணம் காளைகள் உண்ணும் அதிகப்படியான கொழுப்பு உணவுகள், அவற்றின் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன், சுறுசுறுப்பு தன்மையையும் குறைத்து விடும். ஆகவே பயிறு வகைகளை அரைத்து சத்தான மாவு கலந்த உணவையும், பசுந்தீவனங்களையும் வழங்குகிறோம். மேலும் மருத்துவர்களின் பாிந்துரைப்படி ஊட்டச்சத்து உணவுகளையும் உரிய அளவில் அளித்து வருகிறோம்.

காளைகளுக்கு தினமும் நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி அளிப்பதுடன், கொம்புகளில் ஏற்படும் கூச்சத்தைப் போக்கும் விதமாக மண் மற்றும் மரங்களில் கொம்புகளை குத்தும் பயிற்சியும் அளிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு காளைகள் பொதுவாக மூன்று வகையான குணங்களை கொண்டிருக்கும். அவை தன்னை வளர்ப்பவர்களிடம் ஒரு விதமாகவும், பயிற்சியின் போது தனி வேகத்துடனும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் சற்று மூர்க்க குணத்துடனும் நடந்துகொள்ளும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான எனது அனுபவத்தில், காளை வளர்ப்பதும் ஒரு கலையே" என்றார், மகிழ்ச்சியுடன்.


Next Story