மறதியை விரட்டும் 'தூக்கம்'


மறதியை விரட்டும் தூக்கம்
x

வயது அதிகரிக்க, அதிகரிக்க ஞாபகத் திறன் குறைந்து கொண்டே போகும். முன்பெல்லாம் முதுமை காலத்தை நெருங்கியவர்கள்தான் ஞாபக மறதி பிரச்சினையை எதிர்கொண்டார்கள். இப்போது 40 வயதை எட்டுவதற்குள்ளேயே ஞாபக மறதிக்கு ஆளாகிறார்கள்.

தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்கள்தான் நினைவுகளையும், ஞாபக சக்தியையும் குறைத்துக்கொண்டிருக்கின்றன என்கிறது, ஒரு ஆய்வு. நியூரோசைக்கலாஜிக்கல் சொசைட்டி நடத்திய இந்த ஆய்வில், தூக்கம், வயது, மனநிலை இவை மூன்றும் நெருங்கிய தொடர்புடையவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக வயதானவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். ஆனால் இளைஞர்களுக்கு இத்தகைய பிரச்சினை இருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதற்காகவே இரண்டு ஆய்வு களை நடத்தி இருக்கிறார்கள். முதல் ஆய்வில் 110 கல்லூரி மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். தூக்கம், மன நிலை, நினைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இரண்டாவது ஆய்வில் 21 முதல் 77 வயது கொண்ட 21 பேர் பங்கேற்றனர். அதில் அவர்களின் வயதும், ஞாபக திறனும் ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டது. இரு ஆய்வுகளிலும் பங்கேற்றவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவே இருந்துள்ளது. தூக்கமின்மைதான் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் பிரதான பிரச்சினையாக உருவெடுத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிம்மதியான உறக்கம் மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஞாபக திறன் மேம்படும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள்.

''நன்றாக தூங்கி எழுவதுதான் முதுமை காலத்தில் எதிர்கொள்ளும் ஞாபக மறதியை தள்ளிப்போடும். நன்றாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றினால் முதுமை காலத்திலும் நல்ல நினைவுகளை சுமந்து கொண்டு, மறதி பிரச்சினையின்றி மகிழ்ச்சியாக வாழலாம்'' என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.


Next Story