பிளாஸ்டிக் படிப்பும், வேலைவாய்ப்பும்...!
படித்ததும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைக்கு உத்தரவாதம் உள்ள படிப்புகளில், பிளாஸ்டிக் என்ஜினீயரிங் படிப்பும் ஒன்று. அதுபற்றி தெரிந்து கொள்வோம்.
* 'சிப்பெட்' நேரடி படிப்புகள்
மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ், சென்னை கிண்டியில் சென்ட்ரல் இன்ஸ்டிட்டியூட் ஆப் பிளாஸ்டிக் என்ஜினீயரிங் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிளாஸ்டிக் சம்பந்தமான பல படிப்புகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் டெக்னாலஜி டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு என தொடங்கி பி.எச்டி வரை பயிற்றுவிக்கப்படுகிறது.
* 3 ஆண்டு கால டிப்ளமோ
டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி, டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி.
* தகுதி
மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம். இப்படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 20. ஒரு ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பான 'பிளாஸ்டிக் மோல்ட் டிசைன்' படிப்பில் சேர மெக்கானிக்கல், பிளாஸ்டிக் டெக்னாலஜி, ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ பட்டம் தேவை. பிளாஸ்டிக் புராசசிங் மற்றும் டெஸ்டிங் படிப்புகளில் சேர, வேதியியல் துறையில் மூன்று ஆண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் சேர அதிகபட்ச வயது வரம்பு 25.
* நுழைவுத்தேர்வு
மேற்கண்ட படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஜூன் மாதங்களில் நடத்தப்படுகிறது. டிப்ளமோ படிப்புகளில் சேர கல்விக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.
* கூட்டு பயிற்சி
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமாக செயல்படும் சிப்பெட் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிளாஸ்டிக் தொழில்நுட்ப பாடங்களை பயிற்றுவிக்கிறது. வருடத்திற்கு மற்ற தொழிற்துறை வளர்ச்சி 6 சதவிகிதம் என்றால் பிளாஸ்டிக் தொழிற்துறை வளர்ச்சி 14 சதவிகிதமாக உள்ளது. ஒரு ஆண்டிற்கு பிளாஸ்டிக் தொழிற்துறை மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு 'டர்ன் ஒவர்' செய்து வருகிறது.
ரீசைக்கிள் பிளாஸ்டிக் வகை மட்டும் சுமார் ரூ.32 ஆயிரத்து 520 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கிறது. பிளாஸ்டிக் தொழில் மூலம் ஆண்டிற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசு வருமானம் ஈட்டி வருகிறது. அதனால் எந்தவித தயக்கமும் இன்றி இந்த வகையான படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
* வேலை வாய்ப்பு
தனியார் நிறுவனம் முதல் அரசு நிறுவனம் வரை பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. என்ன வகையான படிப்பை படித்தோமோ அதே துறையில் வேலை பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
* சம்பளம்
குறைந்த பட்சமாக ரூ.50 ஆயிரம் முதல் ஆரம்பக்கட்ட ஊதியமாக பெறலாம். முதுநிலை படிப்புகளை முடிக்கும் பட்சத்தில் ரூ.75 ஆயிரம் முதல் ஊதியமாக பெறமுடியும். இங்கு முதுநிலை, இளநிலை, டிப்ளமோ மட்டுமல்லாமல் திறன் சார்ந்த குறுகியகால மேம்பாட்டு வகுப்புகள், தொழிற்பயிற்சி வகுப்புகள் என ஏராளமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு மத்திய அரசுத்துறைகளுடனும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடனும் இணைந்து இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் சிப்பெட் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.