பள்ளிக்குழந்தைகள் மனதில் செயற்கை நுண்ணறிவை விதைப்பவர்


பள்ளிக்குழந்தைகள் மனதில் செயற்கை நுண்ணறிவை விதைப்பவர்
x

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ. எனப்படும் ‘ஆர்டிபீஷியல் இண்டலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு)’ கற்றுக்கொடுத்து, தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சூர்யா பிரபாவுடன் சிறுநேர்காணல்.

சூர்யா பிரபா

* உங்களை பற்றி சிறு அறிமுகம் ?

தேனி அருகே இருக்கும் கம்பம் பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். அங்குதான் பி.எஸ்சி மைக்ரோபயாலஜி படித்தேன். இருப்பினும் திருமணத்திற்கு பிறகு, சென்னையில் செட்டிலாகிவிட்டேன்.

* மைக்ரோபயாலஜி படித்துவிட்டு, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆர்வமானது எப்படி?

என் கணவர், கணினி தொழில்நுட்பம் சம்பந்தமாக படித்திருக்கிறார். அதுதொடர்பாகவே பணியாற்றுகிறார். இதனால், கணினி உலகில் தினந்தோறும் அறிமுகமாகும், புதுப்புது தொழில்நுட்பங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அந்தவகையில்தான், எனக்கு ஏ.ஐ. எனப்படும் ஆர்டிபீஷியல் இண்டலிஜென்ஸ் அறிமுகமானது. அது ரொம்பவும் சுவாரசியமான உலகம். அவைதான், இனி வர இருக்கும் காலங்களை ஆட்சி செய்ய இருப்பதை உணர்ந்து, அதுபற்றி படித்துக் கொண்டேன்.

* அரசுப்பள்ளி மாணவர்கள் மீதான கரிசனம் தோன்றியது எப்போது?

ஏ.ஐ. தொழில்நுட்பம், வருங்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற இருக்கிறது. இந்நிலையில், அதுபற்றிய போதிய விழிப்புணர்வு இளம் மாணவர்களிடம் இருக்கிறதா..? என்பது பெரிய கேள்விக்குறிதான்.

குறிப்பாக, தென் தமிழக பகுதிகளில் இருக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, ஏ.ஐ. பற்றிய புரிதலும், அதுசம்பந்தமான படிப்புகள் பற்றிய விழிப்புணர்வுகளும் போதிய அளவில் இல்லாததை உணர்ந்து, அந்த முயற்சிகளில் இறங்கினேன்.

* என்ன செய்தீர்கள்?

தமிழக அரசின் கல்வித்துறையிடம் முறையான அனுமதி பெற்று, மதுரை, விருதுநகர் பகுதிகளை சுற்றியிருக்கும் அரசுப்பள்ளிகளில், ஏ.ஐ. தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்சி வகுப்புகளை முன்னெடுத்தேன். அதாவது, ஏ.ஐ. தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம், அதன் செயல்பாடுகள், அதன் நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகள், அதுசம்பந்தமான படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள்... இவை அனைத்தையும் விளக்கி, அவர்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில், சில ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான கருவிகளையும் காட்சிப்படுத்தினேன்.

* இந்த சேவை முயற்சிகளை எப்போது தொடங்கினீர்கள்?

2018-ம் ஆண்டு தொடங்கி, கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு வரை துடிப்போடு செயல்பட்டேன். ஆனால், கொரோனா லாக்டவுனுக்கு பிறகு, அனுமதி பெறுவதில் சிக்கல் நீடித்ததால், பழைய வேகத்தில் ஏ.ஐ. தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசுப்பள்ளிகளில் நடத்த முடியவில்லை. இருப்பினும் கிடைக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்கிறோம். தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, சென்னையின் புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கும் பல அரசுப்பள்ளிகளிலும், ஏ.ஐ. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

* வேறு என்ன செய்கிறீர்கள்?

ஏ.ஐ. விளக்க பயிற்சிகள் ஒருபக்கம் நடந்தாலும், சென்னை கொடுங்கையூர் பகுதிகளில் இருக்கும் குழந்தைகள் மறுவாழ்வு மையங்களில் நிறைய புதுமையான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறேன். குறிப்பாக, புகைப்பழக்கம், மது மற்றும் போதை பொருள் பழக்கத்தினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இளம்வயதிலேயே கைவிடப்பட்ட குழந்தைகள் வளரும் காப்பகங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு சென்று, அவர்களது வாழ்க்கையில், ஏ.ஐ. தொழில்நுட்ப வகுப்புகள் மூலமாக மறுமலர்ச்சி உண்டாக்குகிறோம்.

* அடுத்தக்கட்ட முயற்சி என்ன?

அரசுப்பள்ளி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் கற்றல் திறனை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக மேம்படுத்தும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறோம். அதாவது, மனித உடலின் உள் உறுப்புகளை பற்றி அறிந்து கொள்ளவும், முழுமையாக புரிந்து கொள்ளவும் ஏதுவாக டிஜிட்டல் டி-சர்ட்களை உருவாக்கி இருக்கிறோம். இவை பார்ப்பதற்கு இயல்பான டி-சர்ட்டுகள் போலவே இருக்கும். ஆனால் இதை ஸ்கேன் செய்யும்போது, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான டிஜிட்டல் பாடம் வெளிப்படும். அதைக் கொண்டு, மனித உள் உறுப்புகளை டிஜிட்டல் வடிவில் தெரிந்து கொள்ளலாம். இதுபோல, எதிர்காலத்தில் நிறைய விஷயங்களை, எளிமையாக கற்றுக்கொடுக்க இருக்கிறோம்.

* உங்களுடைய முயற்சிகளுக்கு அரசுப்பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்ததா?

ஆம்..! சிறப்பாகவே ஒத்துழைத்தனர். அவர்கள் புதுமைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். அதுவும், கணினி தொடர்பான விஷயங்களை, தெரிந்து கொள்வதிலும், பயிற்சி செய்வதிலும் தீவிரம் காட்டுகிறார்கள்.

* ஏ.ஐ. தொழில்நுட்பத்தை வேறு எப்படி பயன்படுத்துகிறீர்கள்?

இளம்வயதிலேயே, தவறான பழக்கங்களுக்கு ஆளாகும் குழந்தைகளை, டிஜிட்டல் வீடியோக்கள் மூலமாக திருத்த முயல்கிறோம். அவை, இயல்பான வீடியோக்கள் போன்று இருக்காது. மாறாக, வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களது உடலை ஸ்கேன் செய்வது போலவும், அப்போது பாதிக்கப்பட்ட நுரையீரல் வீடியோ காட்சிகள் தோன்றுவது போலவும் உருவாக்கி இருக்கிறோம். நல்லவிதமான மாற்றங்களை, அவர்களது மனதில் உண்டாக்க இது வழிகாட்டுகிறது.


Next Story