பனிப்பொழிவை ரசிக்க, பார்க்க வேண்டிய இடங்கள்
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களை பொறுத்தவரை குளிர்காலம் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீளும்.
அதுவரை பசுமையும், கருமையும் படர்ந்து தென்படும் மலை பிரதேசங்களில் பனிப்பொழிவுகள் குவிந்து வெண்மை நிறத்தில் காட்சி அளிக்க தொடங்கிவிடும். செல்லும் பாதை தவிர மற்ற இடங்களில் பனி படர்ந்து விரிந்திருக்கும் சூழலை காணவும், ரசிக்கமும் முடியும். அப்படி நவம்பரில் பனிப்பொழிவை ரசிக்க நீங்கள் பார்வையிட வேண்டிய 5 இடங்கள் இங்கே...
லாச்சுங், சிக்கிம்:
இது ஜீரோ பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த இடத்தின் எல்லையுடன் இந்தியாவின் நிலப்பரப்பு முடிவடைகிறது. அதற்கு பிறகு சாலைகள் எதுவும் கிடையாது. மேலும் இந்த ஜீரோ பாயிண்ட் சீன எல்லைக்கு அருகில் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் அதற்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
லாச்சுங் பகுதி எப்போதும் பனியால் சூழப்பட்டிருக்கும். இது கடல் மட்டத்திலிருந்து 9,600 அடி உயரத்தில் உள்ளது. பிரபலமான சுற்றுலா தலமாக அறியப்படாததால் இங்கு சாகச நடவடிக்கைகள் எதுவும் இல்லை. ஆனால் கண்களுக்கு விருந்து படைக்கும் அம்சங்கள் ஏராளம் அங்கு உள்ளன.
ஆலி, உத்தரகாண்ட்:
இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே இங்கு பனிப்பொழிவு நிகழும். ஓக் மரங்கள், கூம்பு வடிவ மரங்கள் சூழப்பட்டிருக்கும் இந்த சுற்றுலா தலம், இமயமலையின் நீட்சியாக பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. பனிச்சறுக்கு சாகச பிரியர்களை குஷிப்படுத்தும் அம்சங்கள் ஏராளம் உள்ளன. இங்கு பனிப்பரப்புகளுக்கு மத்தியில் நடை பயணம் மேற்கொள்வதும் அலாதியானது. உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையால் வருடாந்திர விளையாட்டு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
குப்ரி, இமாச்சலப் பிரதேசம்:
குப்ரியில் குளிர்காலம் அக்டோபரில் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும். இது இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவுக்கு அருகில் அமைந்திருக்கும் மற்றொரு மலைவாசஸ்தலமாகும். அமைதி தவழும் வீதிகள் முதல் அதிர்ச்சியூட்டும் சாகசங்கள் வரை ஏராளமான அம்சங்கள் இங்கு உள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீர்:
சோன்மார்க், குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்றவை காஷ்மீரில் உள்ள சில பிரபலமான இடங்களாகும். இங்கு நவம்பரில் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கும். வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழே குறைந்து, மென்மையான பனியில் மூடப்பட்ட உங்கள் பாதங்களின் சுவடுகளை கற்பனை செய்து பாருங்கள். உடல் குளிர்ந்து ஜில்லிடும். பனிச்சறுக்கு சாகசங்களை விரும்புபவர்களுக்கு இந்த இடங்கள் மறக்கமுடியாத அனுபவத்தை பரிசளிக்கும்.
லடாக்:
குளிர்காலத்தில் திரும்பிய இடமெல்லாம் நிலப்பரப்புகள் வெள்ளை நிறத்தில் காட்சி அளிப்பது லடாக்கின் சிறப்பு. காஷ்மீரின் அங்கமான இங்கு ஏரி நீர் உறைந்து வெண்மை திட்டாக மிளிரும். ஓடும் ஆறுகள் கூட பனிப்பொழிவின் ஆதிக்கத்திற்கு அடி பணிந்து பனிக்கட்டிகளாக மாறத்தொடங்கி விடும். அருவிகளில் வழிந்தோடும் நீரும் அப்படியே உறைந்து அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்.
அந்த குளிர் சூழலில் அங்கு உலவுவது மனதை ஜில்லிட வைக்கும். அந்த நினைவுகளை படம் பிடிக்கும் ஆவலை தூண்டும். சில சமயங்களில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைந்து விடும். மைனஸ் டிகிரி குளிரில் நடுநடுங்க வைத்துவிடும்.
அத்தகைய கடும் குளிரை விரும்பாதவர்கள் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் லடாக்கிற்கு செல்லலாம். சாகச பயண ஆர்வலர்கள் பெரும்பாலும் குளிர்காலத்தில்தான் பார்வையிட விரும்புவார்கள். அதற்கேற்ப லடாக்கின் சில பகுதிகளில் மலையேற்றமும், பனிச்சறுக்கும் அரங்கேறுகிறது.