கடும் தவத்தால் அம்பாளை திருமணம் செய்த பாடலீஸ்வரர்


கடும் தவத்தால் அம்பாளை திருமணம் செய்த பாடலீஸ்வரர்
x

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பெரியநாயகி அம்மன் உடனுறை பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பண்டை தமிழ்நாட்டில் நடுநாடு என பெயரமைந்த நாட்டில் உள்ள பாடல் பெற்ற 22 தலங்களில் 18-வது தலமாக உள்ளது.

பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாள் ஆகிய 2 பேரும் தனித்தனியாக கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

கோவில் தல வரலாறு

சைவ பெரியவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் கி.பி.7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பண்ருட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாமூரில் பிறந்தவர். சமண சமயத்தைச்சேர்ந்த அவர் சைவ சமயத்துக்கு மாறியதால், அவரை கொல்ல சமணர்களும், சமண சமயத்தைச்சேர்ந்த மன்னன் மகேந்திரவர்ம பல்லவனும் திட்டமிட்டனர்.

சமணர்கள் செய்த பல கொலை சூழ்ச்சிகளில் இருந்து உயிர் தப்பிய திருநாவுக்கரசரை, கல்லில் கட்டி கடலில் வீசினார்கள். அப்போது அவர் இறைவனை நினைத்து நெஞ்சுருகி பாடினார். கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்ததால், அவர் கெடிலம் நதி வழியாக கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை தரிசித்தார்.

அப்பர் கரையேறிய இடம் இப்போது கரையேற விட்ட குப்பம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

அம்பாளுடன் பகடை ஆடிய சிவன்

அம்பிகையின் சாபம் பாடலீஸ்வரர் கோவிலில் தீர்ந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு படைத்தது. உலகத்துக்கு உயிர்கள் உய்ய வேண்டுமென்பதற்காக சிவன், அம்பாளுடன் பகடை ஆட, அதில் பல முறை ஆடியும் சிவபெருமானே தோல்வி அடைந்தார். ஆனால் வெற்றி தனக்கே என அவர் கருதினார். அருகில் இருந்த திருமாலும், அதை கவனிக்கவில்லை என்று கூறி விட்டார். அம்பாள் கோபமடைந்து, இறைவன் திருக்கண்களை மறைப்பேன். ஒளி தந்தால் இறைவன் வெற்றி பெற்றதாகவும், ஒளி தராவிட்டால் அம்பாள் வெற்றி பெற்றதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இறைவன் கண்களை மூட ஒரு கண நேரம் நீடித்த இந்த நிகழ்வு தேவர்கள் யாவருக்கும் பல யுகங்கள் நீடித்தது. விளைவுகள் கருதாது அம்பாள் செய்ததை வருந்தி மன்னிப்பு கேட்டு விமோசனம் அருளுமாறு இறைவனிடம் கேட்டபோது, அவர் தேவியே நீ பூவுலகம் சென்று 1008 தலங்களையும் தரிசித்து வரும் போது, எந்த தலத்தில் உன் இடது தோளும், இடக்கண்ணும் துடிக்கின்றதோ அந்த இடத்தில் தவம் மேற்கொண்டால் அங்கு வந்து திருமணம் புரிவோம் என்று கூறியதால், இங்கு வந்து அருந்தவம் செய்து, இறைவன், அம்பாளை திருமணம் செய்த தலமாக இது உள்ளது.


Next Story