'சூப்பர்' ஆப்பர்சூனிட்டியின் சாதனை!
சூரிய குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக அங்கே அனுப்பப்பட்டிருக்கும் நாசாவின் நடமாடும் ஆய்வுக்கலமான ஆப்பர்சூனிட்டி (Opportunity), புதிய சாதனை படைத்திருக்கிறது.
செவ்வாய்க்கிரகத்தில் இந்த ஆய்வுக்கலம் இதுவரை 45 கிலோமீட்டர் தூரம் பயணித்திருக்கிறது. இதுவரை இப்படிப்பட்ட ஆய்வுக்கலங்கள் பயணித்த அதிகபட்ச தூரத்தை இது முறியடித்துள்ளதாக நாசா பெருமிதப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி ஆய்வுக்கலம் செவ்வாய்க் கிரகத்தில் சென்று இறங்கும் இடத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தாலே போதும் என்று தான் நாசா முதலில் எதிர்பார்த்தது. ''இந்த எதிர்பார்ப்பை முறியடித்து 45 கிலோமீட்டர் தூரம் வரை இது வெற்றிகரமாக பயணித்திருப்பது மிகப்பெரிய சாதனை'' என்கிறார்கள் நாசா நிறுவன விஞ்ஞானிகள்.
கடந்த 17 ஆண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தில் பயணம் செய்துவரும் இந்த நடமாடும் ஆய்வுக்கலமானது, செவ்வாய்க் கிரகத்தில் முன்பு நீர் இருந்ததற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்து ஆச்சரியம் தந்தது. அதன்பிறகும் தனது ஆய்வுப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை இலக்கு வைத்து சென்று கொண்டிருக்கிறது. அந்த குறிப்பிட்ட இடத்தில் வெளிப்பட்டிருக்கும் களிமண் கனிமங்களை இது ஆராய உள்ளது. செவ்வாயில் மனிதக் குடியேற்றங்கள் சாத்தியமாகுமா என முடிவெடுக்க இந்த ஆய்வு பெரிதும் கைகொடுக்கும்.
இதற்கு முன்பு சந்திரனை ஆராய்வதற்காக ரஷியாவால் அனுப்பப்பட்ட 'லூனோகோட்2' என்கிற ஆய்வுக்கலம் 1973-ம் ஆண்டு நிகழ்த்திய பயண சாதனைதான் சூரியக் குடும்ப கிரகங்களுக்கு அனுப்பப்பட்ட ஆய்வுக்கலங்களின் அதிகபட்ச பயண சாதனையாக இருந்தது. அதை தற்போது ஆப்பர்சூனிட்டி முறியடித்து விட்டது.