பழைய வருமான வரி.. புதிய வருமான வரி -இதில் உங்களுக்கு சிறந்தது எது...?
பழைய வருமான வரி முறை நல்லதா, இல்லை புதிய வருமான வரி முறை நல்லதா என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. இதற்கான பதிலை ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. ஒருவரின் வருமானம், சேமிப்பு இரண்டையும் பொறுத்துதான் யாருக்கு எது நல்லது என சொல்ல முடியும்.
முதலில் நீங்கள் எத்தகைய வருமான வரி கட்டும் வரம்புக்குள் வருகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரைக்கும் இருந்தால் பழைய வருமான வரி முறையில் வருமான வரி கட்டவேண்டிய அவசியம் இருக்காது. உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டி ஒரு ரூபாய் வந்தாலும் பழைய வருமான வரி முறையில் நீங்கள் ரூ.2.5 லட்சத்தில் இருந்து அதற்கு மேலான தொகைக்கு 5 சதவீதம் வரி கட்ட வேண்டும். இந்த வரி விதிப்பு முறையில் எல்.ஐ.சி., பி.எப்., ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்ற சேமிப்புகளுக்கும், வீட்டு வாடகை, கல்விக்கடன், வீட்டுக்கடன்களுக்கான வட்டி போன்றவற்றுக்கும் 80சி., 80டி-ன் கீழ் வரிச்சலுகை உண்டு. அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை இதற்கான சலுகைகளை நீங்கள் அனுபவிக்கலாம். அதாவது உங்கள் 'கிராஸ் ேசலரி' ரூ.9 லட்சம் வரை இருந்தால் பழைய வருமான வரி விதிப்பு முறையில் வருமான வரியே கட்டாமல் கூட சமாளிக்கலாம்.
உங்களுக்கு எல்.ஐ.சி., பி.எப். போன்ற எந்த விதமான சேமிப்பும் இல்லை, வீட்டுக்கடன், கல்விக்கடன் எதுவும் இல்லை, வீட்டு வாடகை மட்டும்தான் செலவு என்றால் புதிய வருமான வரிமுறை பொருத்தமாக இருக்கும். புதிய வருமான வரி முறையில் உங்களது சேமிப்பு மற்றும் கடன்களுக்கான வட்டிகளுக்கு வரிச்சலுகை என்பது சுத்தமாக இருக்காது.
புதிய வருமான வரி முறையை பொறுத்தவரை ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு. அதைத் தாண்டி ஒரு ரூபாய் வருமானம் வந்தாலும் 3 லட்சம் ரூபாயில் இருந்து நீங்கள் வரி கட்ட வேண்டியிருக்கும். அந்த வரி நம் மின்சாரக்கட்டணம் போல் ஒவ்வொரு மூன்று லட்சத்துக்கும் கூடிக்கொண்டே போகும். 5 சதவீதத்தில் ஆரம்பித்து பத்து, பதினைந்து என்று முப்பது சதவீதம் வரை போய்க்கொண்டே இருக்கும்.
இதில் எதைத் தேர்ந்தெடுப்பது? சுருக்கமாகச் சொல்வதென்றால் பெரிதாக எதுவும் சேமிக்காத, கடன்களும் அதிகம் வாங்கி இராத 30 வயதுக்குக் கீழுள்ள இளைஞர்களுக்கு புதிய வருமான வரி முறையும், 40 வயதைத் தொட்டுவிட்ட, கொஞ்சம் சேமிப்பும், வரிவிலக்குக்கு தகுதியான கடன்களும் உள்ள நடுத்தர வயதினருக்கு, பழைய வருமான வரி முறையும் வசதியாக இருக்கலாம். இது ஒரு பொதுவான மதிப்பீடுதான். துல்லியமான மதிப்பீடு என்பது, ஒருவரது மிக சரியான வருமானம் மற்றும் செலவின் அடிப்படையில் மட்டுமே கணக்கிட முடியும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், புதிதாக வருமான வரி செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் 'டீபால்டாக' புதிய வருமான வரி முறையில் தான் சேர்க்கப்படுவார்கள். பழைய வருமான வரிதான் உங்கள் விருப்பம் என்றால் முதலிலேயே அதற்குரிய முறையில் நீங்கள் உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவர் பழைய வருமான வரி முறையில் சேர்ந்துவிட்டு பின்னர் புதிய வருமான வரி முறைக்கு மாறலாம். ஆனால் புதிய வருமான வரி முறையில் சேர்ந்துவிட்டு பின்னர் பழைய வருமான வரி முறைக்கு நிரந்தரமாகத் திரும்பவே முடியாது.
தனிப்பட்ட முறையில் என் கருத்து எதுவென்றால், வருடம் பத்து லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்கள், இப்போது உங்கள் சேமிப்பின் அளவு குறைவாக இருந்தாலும் பழைய வருமான வரி முறையில் சேர்ந்துகொண்டு படிப்படியாக உங்கள் சேமிப்பை உயர்த்திக் கொள்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. வரி குறையவேண்டும் என்பதற்காக நம் வருமானத்தைச் சுருக்கி கொள்வதோ, சேமிப்பை தவிர்ப்பதோ முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. அதிக வருமானம் இருப்பவர்களுக்கு புதிய வருமான வரி முறையில் சலுகைகள் இருப்பதால், அந்த உயரத்தை எட்டும்வரை பழைய வருமான வரி விதிப்பு முறையில் இருந்துகொண்டு நம் வாழ்வின் அடித்தளத்தைச் சேமிப்புகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வதே நல்லது.
வருடம் ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு இரண்டு முறையிலும் கிடைக்கும் சலுகைகள், செலுத்த வேண்டிய வரி...
பழைய வருமான புதிய வருமான வரி முறை வரி முறை
சம்பளம் ரூ. 10 லட்சம் ரூ. 10 லட்சம்
பொதுவான விலக்கு ரூ.50 ஆயிரம் ரூ.50 ஆயிரம்
ரூ.9,50,000 ரூ.9,50,000
80சி விலக்கு ரூ.1,50,000 இல்லை
80டி விலக்கு ரூ.50,000 இல்லை
வீட்டுக்கடன் வட்டி (பிரிவு 24) ரூ.2,00,000 இல்லை
மொத்த சலுகைகள் ரூ.4 லட்சம்
வரிகட்ட வேண்டிய வருமானம் ரூ.5,50,000 ரூ.9,50,000
செலுத்த வேண்டிய வரி ரூ.22,500 ரூ.52,500
இரண்டுக்கும் செஸ் 4% ரூ.900 ரூ.2100
மொத்தம் கட்ட வேண்டிய வரி ரூ.23,400 ரூ.54,600
இரண்டு வரி விதிப்பு முறையிலும் வருமானத்திற்கேற்ப வரி விகிதம்...
பழைய வருமான வரி முறை
ரூ. 2.5 லட்சம் வரை 0%
ரூ. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5%
ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20%
ரூ. 10 லட்சத்திற்கு மேல் 30%
80சி, 80டி, பிரிவின் கீழ் ரூ. 4 லட்சம் வரை விலக்கு உண்டு
புதிய வருமான வரி முறை
ரூ. 3 லட்சம் வரை 0%
ரூ. 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5%
ரூ. 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10%
ரூ. 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15%
ரூ. 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20%
ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30%
80சி, 80டி, பிரிவின் கீழ் எந்த விலக்கும் இல்லை
இரண்டிலும் ரூ.50 ஆயிரம் வரை அடிப்படை விலக்கு உண்டு