இந்தியாவில் வருமான வரி செலுத்தாத 'ஒரு மாநிலம்'
சிக்கிம் மாநிலத்தில் வசிப்பவர்கள் மட்டும் வருமான வரியே செலுத்த வேண்டியதில்லை. சிக்கிம் மாநிலத்துக்கு தனியாக வருமான வரி சட்டம் இருந்தது.
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் தனி நபர் வருமான வரி செலுத்த வேண்டும். அதுபோல் வரி செலுத்தும் ஒவ்வொருவரும் வருமான வரி கணக்கை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வதும் கட்டாயமாகும். ஆனால் இந்தியாவில் வசிக்கும் மக்களில் ஒரு மாநிலத்தில் வசிப்பவர்கள் மட்டும் வருமான வரியே செலுத்த வேண்டியதில்லை.
இது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வட கிழக்கு இந்தியாவில் அமைந்திருக்கும் அந்த மாநிலம் சிக்கிம். சுமார் 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் வருமான வரியே செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் அதற்கு வருமான வரி கணக்கு காண்பிக்க வேண்டியதுமில்லை.
இந்தியாவில் இந்த மாநிலத்திற்கு மட்டும் வரி விலக்கு அளிக்க என்ன காரணம் தெரியுமா?
சிக்கிம், சோக்யால் எனப்படும் புத்த மதகுருவால் ஆளப்பட்டது. அது தனி நாடாகவே விளங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம் நாட்டுடன் சுமுக உறவைப் பேணி வந்தது. 1973-ம் ஆண்டு சோக்யாலின் ஆட்சிக்கு எதிராக கலவரம் வெடித்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களால் 1975-ம் ஆண்டு அங்கு மன்னர் ஆட்சி முறை அகற்றப்பட்டது. 1975-ம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சிக்கிம் 22-வது மாநிலமாக இந்தியாவுடன் இணைந்தது.
அப்போது சிக்கிமில் பின்பற்றப்படும் பழைய சட்டங்கள் தொடரவேண்டும், தனி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு இந்திய அரசியலமைப்பின் 371 (எப்) சட்டப்பிரிவின் படி சிறப்பு அந்தஸ்து சிக்கிம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது. சிக்கிமில் அதுநாள் வரை பின்பற்றப்பட்டு வந்த வரிமான வரி கையேடு முறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, சிக்கிம் மாநிலத்துக்கு தனியாக வருமான வரி சட்டம் இருந்தது. அதன் மூலம் சிக்கிம் மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மத்திய அரசுக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்துக்கான வருமான வரி சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. 2008-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சிக்கிம் மாநிலத்துக்கான சிறப்பு வருமான வரி சலுகைகளை உறுதி செய்யும் வகையில் இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (26 ஏ.ஏ.ஏ) அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி சிக்கிமை பூர்வீகமாக கொண்ட மக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் இந்த சட்டப் பிரிவின்படி சிக்கிம் மக்கள் தாங்கள் ஈட்டும் எல்லாவிதமான வருமானத்துக்கும் வரி செலுத்த தேவையில்லை. மேலும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு சிக்கிம் மாநில மக்கள் பான் கார்டு வழங்க வேண்டியதில்லை.