ஆர்டெமிஸ்-1: நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம் இன்று சோதனை


ஆர்டெமிஸ்-1: நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம் இன்று சோதனை
x

நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1969ம் ஆண்டு முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி உலக சரித்திரத்தில் பெரும் சாதனையை படைத்தது.

இந்நிலையில் தற்போது நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.

இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான ஓரியன் விண்கலத்தை சுமந்து செல்கிறது. இன்று கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுகிறது. ஆர்ட்டெமிஸ்-1, மனிதனை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியின் முதல் படி.

1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ். இதை அடைய புதிய விண்கலத்தையும், அதை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல புதிய ராக்கெட்டையும் உருவாக்கியுள்ளனர்.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லாது, நிலவில் இறங்காது. ஆனால் சோதனை முயற்சியாக மனிதர்களை போன்ற பொம்மைகளை கொண்டு சென்று பூமிக்கு திரும்பும்.

ஆர்ட்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

பூமிக்கு திரும்புவதற்கு, நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி ஓரியன் விண்கலம் திரும்பும். கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் ஓரியன் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story