இயற்கை விவசாயத்தின் 'நண்பன்'..!


இயற்கை விவசாயத்தின் நண்பன்..!
x

‘நண்பன்’ என்ற அமைப்பை உருவாக்கி, அமெரிக்காவில் இருந்தபடியே பல சமூக சேவைகளை ஆற்றி வருகிறார்கள்.

இன்று நம் பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் அனைத்திற்கும் இயற்கையின் மூலமாக தீர்வு காண முடியும். விளை நிலங்களை அதிகமாக உருவாக்கி, விவசாயத்தை அதிகரிப்பதன் மூலமாக சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் மாசுவை குறைக்கவும், கார்பன் அளவை குறைக்கவும் முடியும். நீர் ஆதாரங்களை பூமியில் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு, அமெரிக்காவின் டாலஸ் பகுதியில் குடியேறி இருக்கும் கோபாலகிருஷ்ணன், மணி மற்றும் சக்தி ஆகிய மூவரும், 'நண்பன்' என்ற அமைப்பை உருவாக்கி, அமெரிக்காவில் இருந்தபடியே பல சமூக சேவைகளை ஆற்றி வருகிறார்கள். குறிப்பாக, ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் விளைநிலங்களையும், வறண்டு கிடக்கும் ஏரி, குளம், கண்மாய்களையும் செழிப்பூட்டும் முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறார்கள். இதுபற்றி, நண்பன் அமைப்பின் நிறுவனர்களில், ஒருவரான சக்தியிடம் பேசினோம். அவர் பகிர்ந்து கொண்டவை...

''நண்பன் என்ற வார்த்தை, அமெரிக்கர்களுக்கு வேண்டுமானால் புதிதாக தெரியலாம். ஆனால், தமிழர்களுக்கு நன்கு பரீட்சயமானது. நண்பன் என்பவன், எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் பழகக்கூடியவன், செயல்படக்கூடியவன். அதே கருப்பொருளோடுதான், நண்பன் அமைப்பையும் நாங்கள் கட்டமைத்தோம். இது அமெரிக்காவின் டாலஸ் பகுதியை தலைமை இடமாக கொண்டு, உலகமெங்கும் இயங்கி வருகிறது. இதில் நிறைய புத்தாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான நிதி மேலாண்மை மற்றும் முதலீட்டு ஆலோசனைகள் வழங்குதல், நம்மாழ்வார் கருத்துப்படி இயற்கை விவசாய முறைகளை மீட்டெடுத்தல், அதை மற்ற நாடுகளுக்கும் கற்றுக்கொடுத்து நஞ்சில்லா பூமியை உருவாக்குதல் போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்'' என்று பொறுப்பாக பேசும் சக்தி, ஈரோடு சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்.

எலெக்ட்ரிக்கல் பொறியியல் பயின்று, சில காலம் ஐ.டி. துறையில் என்ஜினீயராக பணியாற்றி, இப்போது அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கிறார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழக விவசாயிகள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளை உணர்ந்துகொண்டு, அதற்கு நண்பன் அமைப்பின் மூலமாக தீர்வு காண்கிறார். விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.

''ஐ.டி. துறையில் வேலை பார்த்தாலும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. அதனால் தமிழ்நாட்டில் இருந்தபோது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவரை தொடர்பு கொண்டு இயற்கை விவசாயம் தொடர்பான பல விஷயங்களையும், விளக்கங்களையும் கேட்டு தெரிந்து கொண்டேன். அவரது கருத்துகள் எல்லாம் மிகவும் எதார்த்தமானது.

விவசாயத்தில் லாபம் ஈட்ட வேண்டுமானால், செயற்கை உரம், ரசாயன பூச்சிக்கொல்லி போன்ற தேவையில்லாத வீண் செலவுகளை குறைத்து, இயற்கை பொருட்களை பயன்படுத்த சொல்லிக்கொடுத்தார்.அதேபோலதான், மழை மூலமாக பூமிக்கு கிடைக்கும் நீரை, கடலில் சேரவிடக்கூடாது என்ற கருத்திலும் உறுதியாக இருந்தார்.

'ஓடும் நீரை நடக்கச் செய்து, நடக்கும் நீரை பூமியில் உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான் நன்னீர் கடலில் சேராமல் விவசாயத்திற்கு பயன்படும்' என கூறி, மழை நீரை சேமிக்க கற்றுக்கொடுத்தார். அவரது ஆக்கப்பூர்வமான கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, எங்கள் அமைப்பின் மூலமாக அவை ஒவ்வொன்றையும் செயல்படுத்தத் தொடங்கினோம். இதற்கு என்னுடைய நண்பர்களும் உதவினர்'' என்பவர், நண்பன் அமைப்பின் பிரீத்தா பிரபாகர் மூலமாக இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்.

''நம்மாழ்வாரின் கருத்துப்படி, முன்பைவிட இப்போது நிறைய விவசாயிகள், இயற்கை விவசாயத்திற்கு மாறிவருகிறார்கள். அவர்களே மனம் மாறினாலும், ரசாயனம் கலந்த விவசாய நிலங்கள், இயற்கை விவசாயத்திற்கு மாற, 2 முதல் 3 வருடங்களாவது தேவைப்படும். அதுவரை அதில் அதிக மகசூல் எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒரு சூழலில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், நம்மாழ்வாரின் வானகத்துடன் கைகோர்த்து இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாய குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறோம். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வரை உதவித்தொகையாக பெறுகிறார்கள்.

இயற்கை அன்னையை புண்படுத்தும் செயற்கை ரசாயனங்களை தவிர்த்து இயற்கை விவசாயத்திற்கு மாறி, இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாய குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறோம். இது அவர்களுக்கு ஒரு தைரியத்தையும், இயற்கை விவசாயி என்பதில் பெருமையையும் உண்டாக்கும்'' என்பவர், இந்த திட்டத்தை 'மதர்ஸ் பார் மதர் நேச்சர்' என்கிறார்.

அதாவது, 'இயற்கை அன்னையை மீட்கப் போராடும் விவசாய அன்னைகளுக்கு உதவும் திட்டம்' என்பது, இதன் பொருள். இதை இந்தியா முழுக்க நடைமுறைப்படுத்தவும் முயன்று வருகிறார்கள்.

இயற்கை விவசாயத்தின் நண்பனாக செயலாற்றி வரும் இந்த நண்பன் அமைப்பினர் இயற்கை விவசாயம் மட்டுமின்றி, நீர் நிலை பராமரிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

''விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளை காப்பாற்றவும், அதை தூர்வாரி சீரமைக்கவும் நிறைய இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அந்த பணிகளுக்கு தேவையான 'எஸ்கவேட்டர்' (ஜே.சி.பி.இயந்திரம்) போன்ற விலை உயர்ந்த கருவிகள், அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதை நிமல் ராகவன் என்ற நீர்நிலை பாதுகாவலர் மூலமாக தெரிந்துகொண்டு, அந்த நடைமுறை சிக்கலுக்கு, எங்கள் அமைப்பின் மூலமாக தீர்வு கண்டிருக்கிறோம்.

சமீபத்தில், ஒரு 'எஸ்கவேட்டர்' வண்டியை பரிசளித்து, 410 ஏக்கர் பரப்பளவு உள்ள மிகப்பெரிய குளத்தை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த முயற்சியின் மூலம், சென்னை மாநகருக்கு ஒன்றரை மாதத்திற்கு தேவையான குடிநீரை அந்த குளத்தில் சேமித்து வைக்க முடியும்'' என்று பெருமிதப்படும் சக்தி பழனி, இதுபோல தமிழகம் முழுவதும் ஏரி-குளங்களை சீரமைக்க ஆவலாக இருக்கிறார்.

''நண்பன் முன்னெடுக்கும் அத்தனை முயற்சிகளும், என் நண்பர்கள் இருவர் உட்பட பலரது கூட்டுமுயற்சியே. திட்டப்பணிகளில் தொடங்கி களப்பணி வரை, எங்களுடன் பலரும் கைகோர்த்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் குறிப்பாக பிரீத்தா பிரபாகர் என்பவர், மிகப்பெரிய நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர். இருந்தபோதிலும், இயற்கை மீதான அன்பினால், இப்போது எங்களோடு கைகோர்த்து, இயற்கை திட்டப்பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

ரசாயனங்களால் புண்பட்டிருக்கும் பூமியை இயற்கை விவசாயத்தால் மீட்டெடுத்து, ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை மேம்படுத்தி, வருங்கால சந்ததியினரை ஆரோக்கியமான சூழலில் வாழ வைப்பதே, எங்களது நோக்கம். இதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் விவசாயிகளால் மட்டுமே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்'' என்பவர், இயற்கை விவசாய முறைகள் மற்றும் அதன் அவசியத்தை நண்பன் அமைப்பின் மூலமாக வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற உலக நாடுகளிலும் விதைத்து வருகிறார்.

குறிப்பாக, அமெரிக்காவின் இயற்கை விவசாய திட்ட குழுவில் அங்கம் வகித்து, அங்கு நடைமுறையில் இருக்கும் கெமிக்கல் விவசாயத்திற்கு மாற்று முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்கள்.

''இன்று நம் பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் அனைத்திற்கும் இயற்கையின் மூலமாக தீர்வு காண முடியும். விளை நிலங்களை அதிகமாக உருவாக்கி, விவசாயத்தை அதிகரிப்பதன் மூலமாக சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் மாசுவை குறைக்கவும், கார்பன் அளவை குறைக்கவும் முடியும். நீர் ஆதாரங்களை பூமியில் தக்கவைத்துக்கொள்ள முடியும். மேலும் இயற்கை விவசாயத்தின் மூலமாக, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளம் வயது உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். இந்த நோக்கத்திற்காகவே நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இனியும் பலமடங்கு வேகத்துடன் உழைப்போம்'' என்று உற்சாகத்துடன் விடை கொடுத்தார்.


Next Story