உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு இடம்
வாழ்வதற்கு ஏற்ற அனைத்துவிதமான கட்டமைப்புகள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள், வேலைவாய்ப்பு, முதலீடு போன்ற பல்வேறு அளவுகளில் நகரங்களின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது
10லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அனைத்து வகையான கட்டமைப்புகளுடன் சிறந்து விளங்கும் இடங்களின் பட்டியலை உலக அளவில் சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் நிலை குறித்து ஆராயும் சர்வதேச நிறுவனம் ஒன்று தரவரிசைப்படுத்தி உள்ளது.
வாழ்வதற்கு ஏற்ற அனைத்துவிதமான கட்டமைப்புகள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள், வேலைவாய்ப்பு, முதலீடு போன்ற பல்வேறு அளவுகளில் நகரங்களின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அந்த தரவரிசைகளின் அடிப்படையில் 1 கோடியே 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் 2023-ம் ஆண்டில் முதல் சிறந்த நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ், நியூயார்க், டோக்கியோ, துபாய், பார்சிலோனா, ரோம், மாட்ரிட் (ஸ்பெயின்), சிங்கப்பூர், ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து) ஆகிய 9 நகரங்கள் அடுத்தடுத்த தரவரிசைகளின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் மராட்டியத்தின் தலைநகர் மும்பை 73-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கனவுகளின் நகரம் என்றும், இந்தியாவின் நிதித் தலைநகரம் என்றும் அறியப்படுகிறது. ஏறக்குறைய 1 கோடியே 70 லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரம் உலகின் மிகப்பெரிய உள்ளூர் ரெயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
கேட்வே ஆப் இந்தியா, தாஜ் ஹோட்டல், ஜூகு கடற்கரை, தொங்கும் தோட்டம் உள்பட ஏராளமான சுற்றுலா தலங்களும் மும்பைக்கு சிறப்பு சேர்க்கின்றன.