கண்காணிக்கும் மென்பொருட்கள்
வெளி விளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விைளயாட்டுகள் குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன.
இது மட்டுமல்லாமல் சுடுவது போன்ற விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்க குணத்தை உண்டாக்கக்கூடும் என்கிறார்கள், குழந்தைகள் மனநல நிபுணர்கள். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச்சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.
புல்லியிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு 'பலவீனமானவனை கொடுமைப்படுத்துதல்' என்ற அர்த்தம் உண்டு. ஒருவரை நேரடியாக மிரட்டுவது, பயமுறுத்துவது, உடல்ரீதியாகத் துன்புறுத்துவது போன்றவை மட்டும்தான் புல்லியிங் என முன்பு கருதப்பட்டது. ஆனால் மேற்கண்ட ஆன்லைன் விளையாட்டுகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான்.
தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச்சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள். நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக இது கருதப்படுகிறது.
ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையதளத்தை பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்கு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.
'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதள பயன்பாட்டை கண்காணிப்பதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருட்கள் உள்ளன.
தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, மாணவர்கள், இளைஞர்கள் இணையதளத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.