கடல் விளையாட்டின் இளம் சாம்பியன் மோனிகா


கடல் விளையாட்டின் இளம் சாம்பியன் மோனிகா
x

நீச்சல் வீராங்கனையான மாணவி மோனிகா தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்று அசத்துகிறார்.

இந்தியாவில் அதிகம் அறியப்படாத விளையாட்டுகளில் 'ஸ்டாண்ட் அப் பேடலிங்' விளையாட்டும் ஒன்று. சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த 12-வகுப்பு மாணவியான மோனிகா, அந்த கடல் விளையாட்டிலும் அசத்துகிறார். நீச்சல் வீராங்கனையான இவர் கடந்த 4 மாதங்களாகவே, பேடலிங் பயிற்சி பெறுகிறார். ஆனால் அதற்குள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்று அசத்துகிறார். இதுபற்றி மோனிகா பகிர்ந்து கொண்டவை...

* ஸ்டாண்ட் ஆப் பேடலிங் விளையாட்டு பற்றி கூறுங்கள்?

அலை சறுக்கு விளையாட்டின் பிறப்பிடமாக கருதப்படும் ஹவாய் தீவில், பலகையில் சறுக்கி விளையாடுவதற்கு முன்பாக, பலகை மீது ஏறி நின்று சிலர் துடுப்பு போட்டதாக கூறுவார்கள். அதுவே, தனி கடல் விளையாட்டாக மாறி, இன்று உலகம் முழுக்க ஸ்டாண்ட் அப் பேடலிங் என்ற பெயரில் விளையாடப்படுகிறது.

* இதன் வரைமுறை என்ன?

படகு போட்டி போலவேதான், இதன் வரைமுறையும். அலை சறுக்கு பலகை போலவே, கொஞ்சம் பெரிதாக தயாரிக்கப்பட்டிருக்கும் பலகை மேல் நின்று, துடுப்பு போட வேண்டும். போட்டி பிரிவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும், போட்டி தூரத்தை வேகமாக கடந்து எல்லை கோட்டை அடைபவர்கள், வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.

* உங்களுக்கு எப்படி ஸ்டாண்ட் அப் பேடலிங் விளையாட்டு அறிமுகம் ஆனது?

நான் நீச்சல் வீராங்கனை. 14 வயதிற்குட்பட்ட மாநில நீச்சல் போட்டியில் பங்கேற்று, பதக்கம் வென்றிருக்கிறேன். இந்நிலையில், என் தந்தையின் நண்பர் சதீஷ் மூலமாகத்தான் எனக்கு பேடலிங் விளையாட்டு அறிமுகமானது. சதீஷ், பேடலிங் விளையாட்டை கற்றுக்கொடுப்பதுடன், சர்வதேச அளவிலான பல போட்டிகளிலும் வென்றிருக்கிறார். அவரே எனக்கும் பயிற்சியளித்தார்.

எவ்வளவு நேரம் பயிற்சி பெறுகிறீர்கள்?

ஸ்டாண்ட அப் பேடலிங் விளையாட்டிற்கு மட்டும் தினமும் 3 மணிநேரம் பயிற்சி பெறுகிறேன். நீச்சல் போட்டிக்கு என 2 மணிநேரம் பயிற்சி பெறுகிறேன்.

* நீச்சல் போட்டியில் இருந்து, பேடலிங் விளையாட்டிற்கு மாறியது எப்போது?

முழுமையாக மாறிவிடவில்லை. இன்றும், நீச்சல் பயிற்சி பெறுகிறேன்.

* குறுகிய காலத்திலேயே பேடலிங் விளையாட்டை கற்றுக்கொண்டது எப்படி?

பேடலிங் போட்டிக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். நான் நீச்சல் வீராங்கனை என்பதால், பேடலிங் விளையாட்டை மிக சுலபமாக கற்க முடிந்தது. கடல் அலைகளுக்கு நடுவே பேடலிங் பலகையில் லாவகமாக நின்றுகொண்டு, துடுப்பு போடுவதையும் வெகு சுலபமாக கற்றுக்கொண்டேன். வெறும் 4 மாதங்களிலேயே ஸ்டாண்ட் அப் பேடலிங் விளையாட்டை கற்றுக்கொண்டு, அதற்கு இடைப்பட்ட காலத்திலேயே, 3 தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டேன்.

* என்னென்ன போட்டிகளில் கலந்து கொண்டீர்கள்?

சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 6 கிலோ மீட்டர் தொலைவை துரத்திப் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றேன். அதேபோல ராமேஸ்வரம் கடல் பகுதியில் நடந்த மற்றொரு தேசிய போட்டியில் 6 கி.மீ. தொலைவை விரைவாக எட்டிப்பிடித்து, தங்கம் வென்றேன். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 200 மீட்டர் போட்டி தூரத்தை 2-வதாக நிறைவு செய்து, வெள்ளிப் பதக்கம் வென்றேன். பயிற்சி பெற தொடங்கிய, 4 மாதத்திற்குள்ளாகவே, 3 தேசிய அளவிலான போட்டிகளில் 3 பதக்கம் வென்றிருப்பது, உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

* உங்களுடைய லட்சியம் என்ன?

ஒலிம்பிக் போட்டியில் ஸ்டாண்ட் அப் பேடலிங் இணைக்கப்பட இருப்பதால், இந்திய அணிக்காக பங்கேற்று, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, என்னுடைய லட்சியம். அதற்கான பயிற்சிகள் தொடங்கிவிட்டன. பயிற்சியாளர் சதீஷ், என்னுடைய வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கிறார். அவரது திறமையான வழிகாட்டுதலில்தான், குறுகிய காலத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்ய முடிந்தது.

* இது ஆபத்தான விளையாட்டா? எல்லோரும் பயிற்சி பெறலாமா?

எல்லா விளையாட்டிலும் ஆபத்து இருக்கிறது. நீச்சல் தெரிந்திருந்தால் போதும், ஸ்டாண்ட் ஆப் பேடலிங் விளையாட்டு பயிற்சி பெறலாம். போட்டியில் பங்கேற்கலாம். பதக்கங்களை வெல்லலாம். அசத்தலாம்.


Next Story